ஒருநிலையே முட்டின்றி மூன்று முடியுமேல் அஃதென்ப பட்டினம் பெற்ற கலம் – நாலடியார் 250
நேரிசை வெண்பா
கருமமும் உட்படாப் போகமுந் துவ்வாத்
தருமமுந் தக்கார்க்கே செய்யா - ஒருநிலையே
முட்டின்றி மூன்று முடியுமேல் அஃதென்ப
பட்டினம் பெற்ற கலம் 250
- அறிவுடைமை, நாலடியார்
பொருளுரை:
பொருள் வரவுக்கு ஏதுவான தொழின் முயற்சியினும் ஈடுபட்டு அதனால் இம்மைப் பயனாகத் தான் போகமுந் துய்த்து மறுமைப் பயனாகத் தகுதியுடையார்க்கே அறமுஞ் செய்து, இம்மூன்றும் ஒரு தன்மையாகவே பிறவியிற் கடைசிவரையில் தடையின்றி நிறைவேறுமாயின், அப்பேறு, தன்பட்டினத்தை மீண்டு வந்தடைந்த வாணிகக் கப்பலை ஒக்கும் என்று அறிஞர் கூறுவர்.
கருத்து:
முயற்சியும் போகமும் அறமுமுடையனாய் வாழ்தலே அறிவுடைமையாகும்.
விளக்கம்:
உட்படா முதலிய வினைகள் உடன்பாட்டின் கண் வந்தன. தக்கார், கல்வியறிவு ஒழுக்கங்களாகிய தகுதியுடையோர், மூன்றும் ஒன்றுபோல் நடைபெற வேண்டுமென்றற்கு ‘ஒருநிலையே' யென்றும், இடையில் ஊறுபடாமல் நடைபெற வேண்டுமென்றற்கு ‘முட்டின்றி' யென்றுங் கூறினார்.