பள்ளியுள் ஐயம் புகல் பயனில்லை - பழமொழி நானூறு 140
நேரிசை வெண்பா
மரம்போல் வலிய மனத்தாரை முன்னின்று
இரந்தார் பெறுவதொன் றில்லை - குரங்கூசல்
வள்ளியி னாடு மலைநாட! அஃதன்றோ
பள்ளியுள் ஐயம் புகல். 140 - பழமொழி நானூறு
பொருளுரை:
குரங்குகள் வள்ளிக்கொடிகளைப் பற்றி ஊசலாடுகின்ற மலைநாட்டைஉடையவனே!
மரத்தைப் போல இறுகிய கல் நெஞ்சுடையாரை அவர் முன்பு நின்று இரப்பவர் பெறக்கடவதொரு பொருளுமில்லை;
அவ்வாறு அவர் முன்பு நின்று இரப்பது சமணப் பள்ளியுள் இரக்கப் புகுதலை யொக்கும்.
கருத்து:
இரக்கம் உடையவர்களிடத்து இரக்க வேண்டும்.
விளக்கம்:
'பள்ளியுள் ஐயம் புகல்' என்றது, பள்ளியுள் வாழ்வார் பிச்சை யெடுத்துண்டு தமக்கென்று ஒரு பொருளும் இலராய்ப் பற்றற்று இருப்பராதலின், அவரிடையே பிச்சை கேட்டுப் புகுவார்க்கு ஒன்றும் பெற முடியாது என்பதாகும்.
அதுபோல, தர்மம் செய்யும் மனமில்லாரிடத்தில் பொருள் பெற முடியாது என்பதாகும்.
பொருளிலராயினும் மனமுடையாரிடத்து இரந்தால் அதனாற் பயன் பெறுதல் உண்டு.
பொருளுடையராயினும், மனமில்லாரிடத்து இரந்து கேட்க வேண்டாம்; அதனால் பயன்பெறுதல் இல்லை.
'பள்ளியுள் ஐயம் புகல்' என்பது பழமொழி.