மூச்சுவிடும் காதுகள்

மெதுவாய் திற கதைசொல்லி
அமுதூட்டிக் கொண்டிருக்கலாம்
ஒரு தாய் பல்லி
*
பாத்திரம் தேய்க்கத் தேய்க்கக்
கறுத்துவிடுகிறது வேலைக்காரச்
சிறுமியின் முகம்
*
பள்ளிக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டு
விழா முடிந்ததும் அதிகாரி
பத்திரத்தில் இட்டார் கைநாட்டு
*
பிறந்தது பெண்குழந்தை
சுரந்தது பால்
கள்ளிச்செடி
*
சிகரட் வாங்கினேன்
பற்றவைத்தாள் தங்கை.
அப்பாவின் காதுகளில்
*
கோழிக்குஞ்சைத் தின்னும்
ஞானமில்லாக் காக்கைக்குப்
போதிமரத்தில் கூடு
*
இருட்டுவதற்குள் தினமும்
வீட்டுக்கு வந்து செல்கிறது
அந்தி வெய்யில்
*
காற்றுப் பிரித்தக் கூரை
வீட்டுக்குள் சிதறிக்கிடக்கிறது
நிலா வெளிச்சம்
*
பாவம் விட்டில் பூச்சிகள்
தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள்
விளக்கில் திரி
*
இழுத்துச் சென்றது வெள்ளம்
பெயரறியா ஊரில் வாழ்கிறது
ஆற்றில் விழுந்த விதை
*
துணையை இழந்ததும்
நெடுந்தூரம் சென்று விடுகிறது
ரயிலில் தொலைந்த செருப்பு
*
உஷ் என்றதும்
அமைதியாகி விடுகிறது
பாம்பு வாய்த் தவளை
*
இலைபோட்டுப் பரிமாறினாலும்
உட்கார்ந்து உண்பதில்லை
நாய்
*
கைசேர்ந்து கொண்டதும்
கைவிட்டுப் போகிறார்கள்
கல்யாண மணவறை
*
கைப்பற்றியக் கள்ள நோட்டு
மாயம் தெரியாமல் மறைத்து விடுகிறது
கைப்பற்றிய நல்ல நோட்டு
*
நான் கடன் வாங்குகிறேன்
மாதந்தோறும் கட்டுகிறாள் மனைவி
புதுப்புதுச் சேலை
*
தரையில் படுத்து
உறங்குகிறான் தச்சன்
கட்டில் செய்த களைப்பு
*
ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்
ஆவணி முகூர்த்தத்தில்
தாவணிகள் பறக்கும்
*
மின்வெட்டுக் காலம்
உற்பத்தியில் பெருக்கம்
சனத்தொகை
*
அடைவுக்கடையைக் கடக்கையில்
பெருமூச்சு விடுகிறது
தூர்ந்துவிட்டக் காது
*
ஊரெங்கும் நறுமணம்
தீப்பிடித்து எரிகிறது
ஊதுவத்தி நிறுவனம்
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-Jul-22, 2:12 am)
பார்வை : 90

மேலே