பிழை
ஆண்டாண்டு காலமாக
சிறுகச் சிறுக நீசேமித்த
விஷ விதைகளை
மனதிலிருந்து கண
நொடியில் காணாமல்
செய்ய நீசெய்யும்
பிரயத்தனங்கள் கண்டு
என் மனதில் வளர்ந்த
குழந்தையாக நீ...
மனது புண்ணாகி,
புண் புரையோடி
வருடங்கள் பல
கடந்த நிலையில்
இன்று புதிதாக
துளிர்க்கச் செய்ய
நினைக்கும் உன்
மடமையை நான்
யென் சொல்வேன்?
மடமை அல்லாது
வேறுசொல் உண்டோ?
வானுயர்ந்த விருட்சமாக
இருப்பினும் பட்டுப்
போகும் சூழலில்,
வேரோடு களைந்தெடுத்து
அவ்விடத்தில் புதிதுநடும்
பழக்கம் நம்மில்
உள்ளது தானே?
இஃது மனிதர்க்கும்
பொருந்தும் பொதுவுடமை
அல்லவா?
ஆனால்,
மனிதமனம் காய்ந்து
சருகாகும் பொழுதுமட்டும்
மீண்டும் துளிர்க்கச்
செய்யும் முட்டாள்
சொர்க்கத்தில் நீந்தும்
மனிதர்களை என்ன
வென்று கூறுவது?
மனிதமனம் மனிதனால்
உருவாக்கப்பட்ட கணினி
அல்லவே, நிமிடத்தில்
தேவையற்றதை களைந்து
புதிது படைக்க...
இறைவா,
கடந்ததை மறக்கும்
வல்லமையை தந்துவிடு,
அல்லது ஒதுக்கும்
வல்லமை யையாவது
தந்து விடு...
சிறிது காலமேனும்
முட்டாள் சொர்க்கத்தில்
மகிழ்ந் திருப்போமே?
மனம் இறங்குவாயா
மாதவனே...
தவறுகளை தவறாது
இழைத்த அப்பொழுதிலும்
உறவுகளையோ, மற்றவர்
மனதைப் பற்றியோ
கிஞ்சித்தும் யோசிக்கும்
மனப்பக்குவம் இன்றி
இருந்த அன்றுமென்
விழிகளில் வளர்ந்த
குழந்தையாக நீ...
மனம்மாறும் பொழுதை
எதிர்நோக்கி காத்திருந்து,
காலங்கள் கடந்ததேயொழிய
எதிர்பாராப்புகள் யாவும்
மண்ணோடு மண்ணாக...
கல்லூரியில் காலெடுத்து
வைக்காத போதும்
முதுநிலை பட்டம் பெற்ற
பட்டதாரியாக நான்.
முக்கிய பாடமோ "மனம்".
ஆயினும்,
மனம்மருகும் வேதனையை
மின்னலென உதிர்த்து
மின்னாமல் முழங்காமல்
புதிதாய் ஜனனமெடுக்கும்
கலையை மட்டும்
கற்றறி யாதது
நான்செய்த பிழை
ஆகியதுவோ???

