வெந்நீர் கருவியில் திடீர் சத்தம்

ஒரு ஞாயிறு காலை, இன்பமாக வெதவெதவென்ற நீரில் குளித்து மகிழலாம் என்று பாத்ரூம் அறையின் வெளியில் இருந்த கீசர் ஸ்விட்சை தட்டிவிட்டேன். ஆனால், சுவிட்ச் உறுதியில்லாமல், loose காண்டாக்ட் மாதிரி இருந்தது. கொஞ்சம் மேலும் கீழும் அசைத்து ஒருவழியாக ஸ்விட்சை கீழே பலமாக தட்டிவிட்டவுடன், கீசரில் பச்சை விளக்கு எரிந்தது. இன்னும் ஐந்து நிமிடங்களில் சுகமாக குளிக்கலாம் என்று நினைத்திருந்தபோது, கீசரிலிருந்து ஏதோ சத்தம் வருவது போல இருந்தது.
சத்தமே இல்லாமல் வேலை செய்யும் நம் வாயில்லா ஜீவன் கீசர், ஏன் இன்று பெரிய ஓசையை எழுப்புகிறது என்று நினைத்து என் மனைவியிடம் சொன்னேன். (வீட்டில் அவள் மட்டும்தான் என்னும்போது வேறு யாரிடத்தில் சொல்ல முடியும்?). அவள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்தாள். பிறகு என்னிடம் " இப்போது சத்தம் கேட்கிறதா?" என்றாள். நான் ஆச்சரியத்துடன் " இல்லை" என்றேன். அவள் " பக்கத்தில் உள்ள 'வெளியேற்றும் விசிறியின்' ஸ்விட்ச்சையும் நீங்கள் தட்டிவிட்டீர்கள்." என்று சொல்லிவிட்டு சமையல் வேலையை பார்க்க சென்றுவிட்டாள். நான் என்முகத்தை கண்ணாடியில் பார்த்து "ஏண்டா, இப்படி இருக்கே?" என்று அசட்டுச்சிரிப்புடன் சொல்லிவிட்டு சுகமாக வெந்நீரில் நீராட களம் இறங்கினேன், இல்லை , குளம் இறங்கினேன், அதுவும் இல்லை, பாத்ரூமுக்குள் சென்றேன். இந்த விஷயத்தை யாரிடமும் சத்தம் போட்டு சொல்லிடாதீங்க.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (24-Jul-22, 7:29 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 121

மேலே