கள்வனின் காதலி

காலையும் மாலையும்
கதிர் வீசிக்
கவரப் பார்க்கும்
கள்வன் ஒருவன் !

எப்படியும்
எட்டிப் பிடித்து விட
ஏங்கிக் கொண்டிருக்கும்
ஏலியன் ஒருவன் !

உன் அழகில் கொஞ்சம்
எனக்கும் தா என
நாளும் சுற்றும்
உன் தோழி !

உனைப் பார்த்த நொடியில்
கிறங்கிப் போய் - வெற்றுக்
கிரகங்கள் ஆன
பல பேர் !

அழகோ அழகு
இவள் பேரழகு
எனப் பாடாத குறை தான்,

நெருக்கமாய் கட்டிய
மல்லிகைப் பூக்களைக்
கருங்கூந்தல் முழுதும்
கண்டது போல,

இரவில் நீ உறங்கும்
அழகைக் காண
வந்ததே கூட்டம்,
அப்பப்பா !

கண்ணைச் சிமிட்டிச் சிமிட்டி
ரசித்து விட்டு - நீ
எழுந்ததும் சமத்தாய்
ஒளிந்து கொண்டனர் !
கள்வர்கள் !!

இது போதாதென,
யாரென்றே தெரியாத
இன்னும் சில பேர் ...

மழை விடுதூது,
தென்றல் விடுதூது,
வண்ணங்கள் கொண்டு
வானவில்லாக,
மேகங்கள் கொண்டு
ஓவியமாக
அனுப்பிய தூது தான் எத்தனை !

இப்படி
உன்னைக் கையாடல்
செய்யக் காத்திருக்கும்
பல பேர் கள்வர்கள் தான் !

நீ சிக்கி
சிதை பட்டுக்
கொண்டிருக்கும்
நாங்களும் கள்வர்கள் தான் !

அழகை ரசிக்கத் தெரிந்த
இனம் தான் நாங்கள்,
இப்போதோ அதைப் 
பறித்துக் கொண்டிருக்கிறோம் !

சீக்கிரம் திருந்தி
காதல் செய்வோம்
கள்வனின் காதலியே !

- நா முரளிதரன் 

எழுதியவர் : நா முரளிதரன் (28-Jul-22, 10:13 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
Tanglish : kalvanin kathali
பார்வை : 72

மேலே