பஞ்சம்

பஞ்சம் பிழைக்க(1972).....

பசியின் பசிக்கு கருப்பையா இறக்க,
பஞ்சம் பிழைக்க வடக்கே பயணம்,
கூட்டம் கூட்டமாய் குடும்பங்கள் நகர,
செங்கமடை கிராமமே வேற்றுகிரகமாக வெறிச்சோடியது..

ஆறாம் வகுப்பை அரைகுறையாய் விட்டுவிட்டு,
அண்டிபிழைக்க அனாதையாக குடும்பத்துடன் பயணம்,
பசியைக்கூட சொல்லத்தெரியாத பசுமாடு ஒன்று,
பாரம் சுமந்துசெல்ல வண்டிமாடு இரண்டு,

நடைபயணமாய் நானூறு மயில்கள் பயணம்,
சேற்றில் உழைத்தவனுக்கு செருப்பேதும் பெரிதல்ல,
வெயிலும் மழையும் தடைசிறைகள் இட்டாலும்,
உதிரம் ஊற்றி உயிர்வாழ பயணம்,
ஒருவேளை உணவிற்கு பத்திரமில்லா உத்தரவாதம்,
செங்கல் சூழையில் எங்களுக்கு சொர்க்கவாசல் திறந்தது,

என்னிடம் இருந்தது மாற்றில்லா ஒரு ஆடை,
அக்குளில் கிழிந்த ஊதா சட்டையும்,
பிறைவடிவ பின்னால் கிழிந்த காக்கிடவுசரும்,
தனியறைகள் பிரிக்கப்படாத தென்னகீற்று மாளிகையில்,
குடும்பத்தில் உறவின் எண்ணிக்கை எட்டு,

அரிசி சோற்றை பார்த்தாலே அதிசயம்,
வடிதண்ணீரில் நாங்கள் பாதிநாட்கள் பசியாறினோம்,
சூரியனுக்குமுன் செங்கல் சூழையில் வருகை பதிவிட்டோம்,
நிலவை வரவேற்று வீட்டிற்கு கூட்டிச்சென்றோம்,

குழந்தைகள் நடைபழகிய நாட்கள் முடிந்ததும்,
சூழையில் கலவைமண் மிதிக்க துவங்கும்,
அந்தநாட்களில் அறுக்கப்பட்ட கற்கள் அனைத்திலும்,
ஆயிரம் வலிகளும் ரணங்களும் சொல்லும்..

அந்த நாட்களை நினைத்து கதை செல்லும்போதெல்லாம்,
அருவியாய் என் அப்பாவின் கண்ணில்
கண்ணீர் ஓடும்...

எழுதியவர் : சிபூ (6-Aug-22, 1:38 pm)
Tanglish : pancham
பார்வை : 78

மேலே