வரலட்சுமி விரதம்

*வரலட்சுமி விரதம்*
🎍🎍🎍🎍🎍

அன்று மாலை நேரம்.மரங்களின் அசைவுகளில் ஓசையோடு கூடிய இதம்தரும் சுகமான காற்று. கல்லூரி உரிய நேரத்தில் விடப்படாமல் குறைந்தது இரண்டு மூன்று மணி நேரம் முன்பாகவே விடப்பட்டது. கல்லூரி மாணாக்கர்கள் சிட்டாகப் பறந்து விட்டனர். கல்லூரி ஊழியர்கள் பலரும் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்து விரைவில் கல்லூரியை விட்டு வெளியேறினர். அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கல்லூரி ஊழியர்களும் மாணவர்களும்ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே கல்லூரியை விட்டு மெதுவாய் வெளியேறிக் கொண்டிருந்தனர். தினமும் கல்லூரிக்கு வரும் ஊழியர்கள் அவரவர் துறையை அடைவதற்கு முன் நான்கு ஐந்து மரங்களுக்கு நடுவிலும்,நூலகத்திற்கு எதிர்ப்புறமாகவும் இருக்கும் காபிக் குடிலைக் கடந்துதான் செல்வர். இடைவேளை நேரம், பசி, மனவருத்தம், நோய், ஆலோசனை நேரம் என எல்லாவற்றுக்கும் அருமருந்தாய் அந்தக் காபிக் குடில். அனைத்துத்துறை பேராசிரியர்களும் பல் துறை மாணவர்களும் ஒன்றாகக்கூடிச் சங்கமிக்கும் இடம். அவரவர்க்குள்ள மகிழ்ச்சியையும் வருத்தங்களையும்
பகிர்ந்து கொள்ளும் இடம்.ஒருவருக்கொருவர் ஆறுதல் மொழிகளைக் கூறி ஆற்றிக் கொள்ளும் இடம்.அவரவர் திறமைகளை மதித்து ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்ளும் இடம்.கூட்டாகச் சேர்ந்து குழுக்களாக அமர்வதற்கு ஏற்ற இருக்கைகள் இருப்பதால் இனிப்புப் பெட்டியை மொய்த்திருக்கும் ஈக்களைப் போல் ஊழியர்கள், மாணவர்கள் எனப் பலரும் பாரபட்சமின்றி அக்காபிக் குடிலைச் சூழ்ந்திருப்பர்.இனிப்புப் பண்டங்களை நோக்கிச் செல்லும் எறும்புகளின் வரிசை,உண்பவரைச் சுற்றி சுற்றி வரும் நாய்களின் நிலை, நாய்களுக்குச் சிறிது கொடுத்துவிட்டுத் தாமும் உண்போர்,பண்டங்களைக் குரங்குகளிடமிருந்து மறைத்து ஒளித்து உண்போர், குரங்குகளிடமிருந்து தம்மைக் காத்துக்கொள்ள கையில் வைத்திருக்கும் பண்டங்களைத் தூக்கி எறிந்துவிட்டு வேறு பண்டங்களை வாங்கி மறைத்து உண்போர், கீழே கிடக்கும் வாட்டர் பாட்டில்கள்,டீ, காபி குடித்துவிட்டுப் போடப்பட்டிருக்கும் டம்ளர்களை மனிதர்கள் தூக்கிக் குடிப்பதைப் போலவே குடிக்கும் குரங்குகள் எனப் பார்ப்பதற்கு அனைத்துமே அழகாக இருக்கும்.அங்கு எப்பொழுதும் மெது வடை, போண்டா, சமோசா, குட்டி சமோசா, வாழைப்பழ கேக், காய்கறி உருளை, காபி, டீ, ரோஸ் மில்க், பாதாம் மில்க், மோர்,பிஸ்கட் எனப் பல வெவ்வேறு விதமான உணவுப் பண்டங்கள்.பல வகையிலும் இன்பத்தைத் தரும் அந்தக் காபிக்குடில் என்னவோ அன்று களையிழந்து இருந்தது. வறண்டிருந்த காபிக் குடிலை நோக்கிப் பேராசிரியர்கள் இருவரும் சென்றனர். அன்று வரலட்சுமி நோன்பு. ஆனால், காபிக்குடில் கடைக்காரர்கள் முகமோ வாடிப் போயிருந்தது. உள்ளத்தின் சோகம் வெளியில் தெரிய அதை மறைத்துச் சிரித்த முகத்தோடு பேச்சைத் தொடங்கினர். பேராசிரியர்கள் இருவரில் ஒருவர் லக்ஷ்மி. மற்றொருவர் கௌரி. குவிக்கப்பட்டிருந்த வடை முதலிய பண்டங்களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள் கௌரி. மீந்த வடைகளை என்ன செய்வீர்கள் என்ற கேள்வி எழும் முன்பாகக் குரங்கிற்குப் போடுவோம் என்று தழுதழுத்தக் குரலில் கடைக்காரர் மூவரில் ஒருவர் கூறினார். மற்ற இருவரும் சோகத்தோடு முகத்தைக் கீழே கவிழ்த்தனர். காபி குடிக்கலாம் என நினைத்த லக்ஷ்மியும் கௌரியும் ஆளுக்கு இரண்டாக வடைகளைத் தட்டில் வைத்துத் தின்றனர். வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று கூறி ஐந்தைந்து வடைகளைப் பார்சலாகக் கட்டிய கடைக்காரரிடமி ருந்து தனக்கு ஒன்றை வைத்துக்கொண்டு கௌரிக்கு ஒரு பார்சலைக் கொடுத்தாள் லஷ்மி. பிறகு இருவரும் காபி அருந்தினர். சிறிது நேரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வந்த கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவர்களை அழைத்து வடையை வாங்கிச் செல்லுமாறு கூறினாள் லஷ்மி. வடைகள் விற்பனையாகின.
சிறிது களைகட்டியது அந்தக்
காபிக்குடில்.போட்ட முதலீட்டிற்கு இலாபமில்லை குறைந்த வருமானம் தான். என்றாலும், நட்டம் ஏற்படாமல் அன்று அம்மூவரின் வயிற்றுப்பசிக்கும் வருமானம் கிடைத்தது. மூவரின் முகத்திலும் சிறிது மகிழ்ச்சி. அன்று எதுவும் இல்லை என்ற நிலை இல்லாது *லஷ்மி வடிவில் குடி புகுந்தாள் வரலட்சுமி காபி குடிலுக்குள்.*

லக்ஷ்மி செய்த உதவி கடலினும் பெரிதென்னும் நன்மை அன்றோ!
அவள் பெயரில் மட்டுமல்ல லஷ்மி.நல்ல எண்ணங்களிலும் தான்.....

*" நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே".*

கதைக்கரு மற்றும் ஆக்கம் முனைவர். க. அன்புக்கோகிலா

எழுதியவர் : முனைவர் க அன்புக்கோகிலா க (8-Aug-22, 8:23 pm)
பார்வை : 125

மேலே