தகப்பன்சாமி
தகப்பன்சாமி
காலையில் வேலைக்கு வரும் வரை பாக்கி வைத்திருந்த பணியை பற்றி ஞாபகத்திற்கு வரவில்லை. உள்ளே வந்த பின்னால் அரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த பணியாள் இவனை அழைத்தான்.
ராஜ்குமார் இங்க வாங்க, நீங்க நேத்து எத்தனை மணிக்கு வேலைய விட்டு போனீங்க?
ஏழு மணிக்கு சார்,
அப்ப மூணாவது ரூமுல அடுக்கி வச்சிருந்த சேரை எல்லாம் எடுத்து போடணும்னு உங்களுக்கு தோணலையா?
சார் கொஞ்சம் யோசியுங்க, இவ்வளவு பெரிய “பங்க்சன்” நடந்திருக்கு, எங்க ஆளுங்களை வச்சு “அரேஞ்மெண்ட்” ஒரே நாள்ல பண்ணியிருக்கோம், காலையில இருந்து “பங்க்சனுக்கு” வர்றவங்ளுக்கு ‘டீ காப்பி’ சப்ளை பண்ணறதுல இருந்து அவங்க சாப்பிட்டுட்டு போட்ட தட்டை எடுத்து கழுவி துடைச்சு வக்கிற வேலை வரைக்கும் பார்த்திருக்காங்க, அதுவுமில்லாம, பங்க்சன் முடிஞ்ச பின்னால, ஆயிரம் சேரையும் எப்படி சார் எடுத்து போட முடியும்? வேலை செஞ்சவங்க எல்லாம் ரொம்ப சோர்ந்து போயிட்டாங்க, ஒரு சிலர் எங்கனால முடியலையின்னு சாயங்காலமே கிளம்பி போயிட்டாங்க. நான் ஏழு மணி வரைக்கும் இருந்து முடிஞ்ச வரைக்கும் எடுத்து வச்சிட்டு நாளை காலையில எடுத்து போட்டுடலாமுன்னு போனேன்.
உங்க கிட்ட யாரும் “பங்க்சன்” முடிஞ்ச பின்னால “ஓணரம்மா” வருவாங்கன்னு சொல்லலையா?
அவங்க வர்றதை யாரும் சொல்லலை சார், எங்க வேலை முடியறதுக்கும் ஓணரம்மா வர்றதுக்கும் என்ன சார் சம்பந்தம்?
என்ன இப்படி பேசறீங்க? உங்க கம்பெனி ஆளுங்களை வச்சுத்தான் இந்த பங்க்சனை நடத்தறதுன்னு முடிவு பண்ணி காண்ட்ராக்ட் கொடுத்தப்ப என்ன சொன்னீங்க?
அவரின் இந்த கேள்வி அவனுக்கு எரிச்சலூட்டியது. சே.. என்ன மனிதர்கள், காலையில் ஆறு மணிக்கு ஆட்களை அழைத்து வந்து எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிக்க காலை பத்து மணி ஆகியிருந்தது. வேலை செய்யும் ஆட்களை போய் சாப்பிட்டு வர சொல்லி அனுப்பியவன், அவர்கள் வந்தபின் இவன் சாப்பிட போகும்போது அங்கு எல்லாமே காலியாகியிருந்தது. வெறும் வயிற்றில் நின்றிருந்த போது “பங்க்சன்” ஹாலில் இருந்து அழைப்பு, உடனே இங்கு வா..!
வந்தவன் தான் மதியம் கிடைத்த நேரத்தில் போய் கிடைத்ததை அள்ளி போட்டு விட்டு ஓடி வந்தான். அந்த டேபிளை மாத்து, இந்த சேரை எடுத்து இப்படி போடு, இந்தாப்பா சூப்பர்வைசர், உடனே அவங்களை வர சொல்லு, இப்படி எண்ணற்ற வேலைகளை கொடுத்து கொண்டே இருந்தார்கள்.
காலையிலேயே இங்கு “பங்க்சனில்” கலந்து கொள்ள வருபவர்களுக்கு காலை உணவை இவர்கள் பசியோடு விநியோகித்திருந்தனர், மதியமும் அப்படித்தான், வந்தவர்கள் எல்லோரும் சாப்பிட்டு முடிக்க மதியம் மூன்று மணி ஆகி விட்டது. அதன் பின் இவர்கள் ஒருவர் பின் ஒருவராக அவர்களுக்கு வழங்கும் உணவு இருப்பிடத்திற்கு சென்று சாப்பிட்டு வர, கடைசியாக இவனும் போய் ஒரு வாய் போட்டு விட்டு வந்தான்.
அப்படி இப்படி என்று இவர்கள் விழாவை முடிக்க மணி ஆறு மணிக்கு மேல் ஆகி விட்டது, அதன் பின்னார் மீண்டும் பழையபடி எல்லாவற்றையும் சரி செய்ய ஆரம்பித்து பாதி பேர் முடியாமல் கிளம்பி விட்டனர். உண்மையில் அவர்கள் பணி ஆறு மணியுடன் முடிந்தது. அதற்கு மேல் அவர்களை இருக்க சொல்வதும் பாவம். காலை ஆறு மணிக்கு உள்ளே வருபவரகள்.
இருந்தும் இவன் ஒருவனாக கஷ்டப்படுகிறானே, என்று ஒரு மணி நேரம் கூடுதலாக பணி செய்து முடிந்தவரை அடுக்கி கொடுத்துதான் கிளம்பினார்கள் அவர்கள். மிச்சம் வேலையை காலையில் வந்த அரை மணி நேரத்தில் முடித்து விடலாம் என்றுதான் வீட்டுக்கு கிளம்பினான்.
வேலை செய்து சென்ற களைப்பு, நாலு மணிக்கு அம்மா, அப்பா ஊரிலிருந்து வந்தார்கள், அவர்களை எழுந்து அழைத்து வந்தது மீண்டும் தூங்க போய் எழ, ஏழு மணி ஆகி விட்டது. அதன் பின்னர் எழுந்து குளித்து தயாராகி இதோ கம்பெனிக்குள் நுழையும்போது இப்படி ஒரு கேள்வி.
இவனின் அமைதியை பார்த்த அந்த பணியாள், ‘ஓணரம்மா’ வந்து பார்த்துட்டு சத்தம் போட்டுட்டு போனாங்க, என்ன வேலை செய்யறாங்க, அவங்க காண்ட்ராக்டை நிறுத்த சொல்லணும்னு சொல்லிட்டு போனாங்க.
இதுக்கெல்லாமா இப்படி சொல்லுவாங்க, இருந்தால் ஐம்பது சேர்கள் மட்டும் கிடந்தது, அதை அரை மணி நேரத்துக்குள் எடுத்து வைத்து விடும் வேலை, இதற்கு போய், மனதுக்குள் நினைத்து கொண்டாலும் வெளியில் சொல்ல முடியாமல் அப்படியா..! என்பது போல் பார்த்தான்.
கண்டிப்பாய் ‘ஓணரம்மா’ இவனது முதலாளியிடம் சொன்னால் அவர் இவனை கூப்பிட்டு ஏதாவது சொல்வார், ஏற்கனவே ‘கொரானோவுக்கு’ பிறகு இப்பொழுதுதான் வேலைகள் வந்து கொண்டிருக்கிறது.
செல்போன் அழைத்தது, மனம் பக்கென்றது போச்சு, முதலாளி கூப்பிடுகிறாரோ? பயத்துடன் எடுத்து பார்க்க அவன் அப்பா..
என்னயா..எங்கன இருக்க..?
வேலையிலதான் சுரத்தில்லாமல் சொன்னான்,
என்னயா, பேச்சுல வருத்தம் தெரியுது, நா வேனா அங்க வரவா
வேனா வேணாம், என்னத்துக்கு போன் பண்ணா..
நாங்க கிளம்பறோம், எனக்கும் வேலைக்கு போவனுமில்லை,
நேத்து இராத்திரிதன வந்தா..அதுக்குள்ள என்ன அவசரம்.
எங்களுக்கு என்ன வேலை இங்க, உன்னையும், உன் சம்சாரத்தையும், பேத்தியயையும் பார்த்துட்டோம், உங்கம்மாளை கூட்டிட்டு கிளம்பறேன்
அப்பா,அம்மா, நேற்று விடியற்காலை நாலுமணிக்குத்தான் வந்தார்கள். அதுவும் காலை நாலு மணிக்கு இவன் போன் அடிக்கிறதே என்று பார்க்க அப்பா..
தம்பி எழுப்பிட்டனா இராசா, நானும் அம்மாளும் பஸ் பிடிச்சு கோயமுத்தூரு வந்து இறங்கி உன் வீட்டுக்கு ஆட்டோவுல வாறோம், இதா அவருகிட்ட செல் தாரேன், வழி சொல்லிடறயா ராசா.
ஆட்டோ டிரைவரிடம் வீடு வர வழி சொன்னான், அவரும் நானும் அந்த பக்கமாத்தான் இருக்கேன், நீங்க கவலைப்படாதீங்க.தைரியப்படுத்தினார்.
வாசலில் காத்திருந்தான். ஆட்டோவில் இருந்து மூன்று மூட்டைகளை இறக்கினார்கள். இவன் ஓடிப்போய் எல்லாவற்றையும் இறக்கினான். ஏம்மா என்னத்துக்கு இத்தனைய சுமந்துட்டு வந்தே..
ஏண்டா ஊருல திருவிழாவுக்கு வருவேன்னு பார்த்தோம், அதுக்கும் வரலை, சரி ஆறு மாசமாச்சு கண்ணுக்குள்ள இருக்கறயேன்னு வந்தோம்.
அதுக்காக இம்புட்டை சுமந்து மூணு பஸ் மாறி வரணுமா?
இது என்ன சுமை ராசா.., அம்மாளின் குழைவு, அப்பா அதற்குள் மூட்டையை பிரித்து எல்லா பொருட்களையும் எடுத்து தனிதனியே வைத்தார். அந்த மாததிற்கான அரிசி, பருப்பு, சர்க்கரை எல்லாமே இருந்தது.
அதற்குள் இவன் மனைவி காப்பி கலந்து எடுத்து வர, இரும்மா போய் முகம் கழுவிட்டு வந்து வாங்கிக்கறேன், பின்புறத்திற்கு வழி கேட்டு சென்றார் அப்பா.
அம்மா அவனை தடவியவாறு பேச ஆரம்பித்தாள். சட்டென ஞாபகம் வந்தவளாக சரி ராசா நீ போய் படு, நாளைக்கு வேலைக்கு போற புள்ளை. அவனை கட்டயாப்படுத்தி படுக்க வைத்தாள்.
இவன் தூங்கி போக, அவரவர்கள் அப்படியே ஓரமாய் படுத்து விட்டார்கள். எல்லோருக்குமே அசதியான தூக்கம்.
இவன் அந்த நிறுவன அதிகாரி முன்னால் நின்றான், சார் எங்கம்மாவும் அப்பாவும் ஊருல இருந்து வந்திருக்காங்க, இப்ப ஊருக்கு கிளம்பறாங்க, நான் பஸ் ஸ்டேண்ட் வரைக்குமாவது போய் அவங்களாய் அனுப்பிச்சிட்டு வந்துடறேன்.
போய்ட்டு சீக்கிரமா வந்துடுங்க, ஓணரம்மா வந்தாலும் வருவாங்க. உடனே தன்னுடைய இரு சக்கரவாகனத்தை எடுத்து கொண்டு வீட்டுக்கு விரைந்தான். இவன் சென்ற போது அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகில் வண்டியை கொண்டு போய் நிறுத்தி அப்பாவை ஏற சொன்னான். அவர் பின்புறம் அம்மா ஏறிக்கொண்டாள். அவர்கள் கையில் வைத்திருந்த பையை முன் புறம் வைத்தவன் அவிநாசி ரோட்டில் சித்ரா பஸ் நிறுத்தத்துக்கு விரைந்தான்.
பஸ் ஏறுவதற்கு முன்னால் ராஜ்குமாரின் தோளை பற்றி கொண்ட அவன் அப்பா எப்பா வேலை சிரமமாயிருந்தா வூடு வந்து சேரு, உனக்கு சம்பாரிச்சு போட நானிருக்கேன், நீ வேலையில மனசை போட்டு குழம்பி அவனுக்கும் இவனுக்கும் பயந்து உடம்பை கெடுத்துக்காத ராசா.. புரிஞ்சுதா, உடனே கிளம்பி வந்துடு..
அப்பாவும், அம்மாவும் பஸ் ஏறி போன பின்னாலும் அவர் அவன் தோளை தொட்டு சொன்ன வார்த்தைகள் மனசில் ஒலித்து கொண்டே இருந்தது.
நிறுவனத்துக்குள் நுழையும்போது அவன் மனம் என்னவானாலும் பார்த்து கொள்ளலாம் என்ற எண்ணம் வந்திருந்தது.
உன்னைய முதலாளியம்மா கூப்பிடறாங்க…, அவர்களிடம் நேற்று செய்த வேலைகள், சிரமங்களை சொல்லி புரியவைக்க முயற்சிக்க வேண்டும், இல்லையென்றால்……..பார்க்கலாம், ஆனது ஆகட்டும் தெளிவாய் அவர்கள் முன்னே நின்றான்.
அவனை ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்த ஓணரம்மா “ரொம்ப நல்லா பங்க்சனை நடத்தி கொடுத்திட்டீங்கப்பா” வெரி குட், பாராட்டி விட்டு வெளியே கிளம்ப எழுந்தவர், அப்பா பாக்கி ‘சேர்சை’ எல்லாம் போட்டுடுப்பா..வேற ஒண்ணுமில்லை அதுக்குத்தான் கூப்பிட்டேன், நீ போ..
மனம் முழுக்க மகிழ்ச்சியாய் உணர்ந்தான். மிக சாதாரணமான விசயம், அதை எந்தளவுக்கு மனசை பாதிக்க செய்து விடுகிறார்கள் மற்றவர்கள்.