அப்பா 1

வீறிட்டு அலறிய பூப்பந்தை
என் கையில் ஏந்தியபோது
வாழ்நாள் சாதனையாளன்
விருதை பூங்கொத்து கொடுத்து
போற்றுதல்போல்
பூரித்துப் போனேனே.
பத்துமாதம் சுமந்த பாரம்
இறக்கிவிட்டாள்....
அவள் இறக்கிய பாரம்
ஏறிவிட்டதடி... மகளே
என் நெஞ்சுக்குள்ளே...!

உன் பிஞ்சு விரலை - அந்த
பஞ்சு பாதத்தை தடவும் போது
சில்லென்று ஒரு பந்து
தொண்டைக்குழியிலிருந்து
உச்சிமண்டை வரை உருண்டு
குளிர்ந்து போகிறதடி.....!
போக்கை வாய் சிரிப்பிலும்
கெக்கபிக்க பேச்சிலும்
என்னை இழந்து
லேசாகிப்போகிறேனடி....
அந்த தேவ பாஷை
எனக்கும் கொஞ்சம்
புரிகிறதடி....

நீ புரண்டு படுக்கையில்
நானும் புரண்டு போகிறேனே..
என் கைபிடித்து
தத்தக்கா பித்தக்கா என
நீ நடக்கையில்
உள்ளம் பலூனாய் பறக்கிறதடி...
ஓடி வந்து என் கைக்குள்
அணையும்போது
ஒலிம்பிக் போட்டியில்
தங்கப் பதக்கம் வென்ற
மமதையில் நான்
தலைநிமிர்ந்து போகிறேனடி...!

கூட்டத்தில் சாமிபார்க்க
உன்னை தோள் மீது ஏற்றி
நிற்கையில்
' எவரெஸ்ட் ' சிகரம்
ஏறியதுபோல் நான்
குளிர்ந்து போகிறேனடி...!
பாவாடை தாவணியில் நீ
வளைய வருகையில் - நான்
என் தாடை தடவி
அதிசயத்துப் போகிறேனடி...
அதற்குள் இத்தனை
ஆண்டுகள் முடிந்து விட்டதா என்ன?..

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (12-Aug-22, 7:19 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 27

மேலே