அப்பா 2
'அப்பா' என்ற ஒரு சொல்லை
உன் வாய் வழியே கேட்கும்போது
அப்பப்பா அந்த சுகம்
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை...
அனுபவிக்க வேண்டும்.
சிறு தவறுகள் செய்த பின்
' என் செல்ல அப்பா 'இல்ல
' என் டெடிபேர் ' இல்ல
என்று என்னை சமாதானம்
செய்யும்போதும்
' டேய் அப்பா....
இதையெல்லாம் யார் உன்னை
செய்ய சொன்னது ?' என்று
வம்புச்சண்டைக்கு இழுக்கும்போதும்...
' இவர் என் அப்பா...
இவரைப் பற்றி யாராவது
ஏதாவது சொன்னீங்க....அவ்வளவுதான்'
என்று வக்காலத்து வாங்கி
சிலிர்த்து நிற்கையில்
என் தாயின் சாயல்
உன்னில் கண்டு என்
கண்கள் குளமானதே...
பருவம் வந்தபின் - உன்
உருவ மாற்றங்கள் ஏன் முக
பருக்கள்கூட என்
பதற்றத்தைக் கூட்டியதே...
கைபேசியில் நீ
தனியாக பேசினால்கூட
என் உடற்சுடு கொஞ்சம்
ஏறித்தான் போகிறது....!
காதலுக்கு நான்
ஒன்றும் எதிரியல்ல... உன்
களவு வாழ்க்கை
கனவு வாழ்க்கையாய்
கரைந்திட கூடாதே
என்கின்ற பதற்றம்தான்...
அதனால் நீ
ஒளித்து மறைத்து
செய்கின்ற சில காரியங்கள்
ஏற்க என்னால் முடிவதில்லை..
உன் தோல்வியை தாங்கும்
சக்தியும் எனக்கில்லை..
கல்யாணம் ஒன்றை செய்துவிட்டால்
ஒரு கடன் தீர்ந்தது என்று சொல்வார்கள்
எனக்கோ உந்தன் பிரிவை
ஏற்று வாழ்க்கையை எப்படி
நகர்த்துவது என்கின்ற குழப்பம்தான்.
சீக்கிரம் என்னை
தாத்தாவாக்கிவிடு
மறுபடியும் ஒரு
பூப்பந்தை கை ஏந்த
என் உள்ளம் ஏங்குகிறது....
.