புன்னகை கொண்டு வாழ்ந்திடுவீர்
கொடுத்தலும் வாங்கலும் இல்லாது
கடமை ஆற்றும் மனமுடையார்
பிடிப்புடன் எங்கும் இருந்துவிடின்
பேயாம் கையூட்டு மறைந்திடுமே
படித்தவர் பணியும் என்றென்றும்
பெருமை பெற்று விளங்கிடுமே
அடுத்தவர் வாழ்வைக் கெடுக்காமல்
அகமதில் இனிமை தங்கிடுமே.
எத்தனை எத்தனை ஊழலடா
எண்ணிப் பார்த்தால் துயரமன்றோ!
புத்தனே வரினும் கையூட்டால்
பித்தனாய் ஆக்கி விரட்டிடுவார்
உத்தமர் காந்தி வந்திடினும்
ஊழல் செய்திட வைத்திடுவார்
சத்தியம் தன்னை சக்கரையாய்
சரித்திரம் மாற ச் செய்திடுவார்.
போதி மரத்தினை வெட்டிடுவார்
புழுவாய் மக்களை ஆக்கிடுவார்
சாதியின் உள்ளே மறைந்திடுவார்
சாக்கடை போன்றே மாறிடுவார்
ஊதி ஊதி பெருக்கிடுவார்
ஊழலை நாளும் விதைத்திடுவார்
நீதியை ஊழலால் வாங்கிவிட்டு
நீதி வென்றது என்றுரைப்பார்.
பதர்கள் போலும் இருந்தவர்கள்
பண்புகள் பெற்று மாறிவிடின்
எதற்கும் கையூட்டி என்றநிலை
இனியிங் கில்லாது ஓடிடுமே !
அதற்காய் நாளும் உழைத்திடுவீர்
அன்பை விதைத்து வாழ்ந்திடுவீர்
புதிய உலகைப் படைத்திடுவீர்
புன்னகை கொண்டு வாழ்ந்திடுவீர்1