தனதாயின் தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான் யானும் அதனை அது – நாலடியார் 276

நேரிசை வெண்பா

எனதென(து) என்றிருக்கும் ஏழை பொருளை
எனதென(து) என்றிருப்பன் யானும்; - தனதாயின்
தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்;
யானும் அதனை அது 276

- ஈயாமை, நாலடியார்

பொருளுரை:

என்னுடையது என்னுடையது என்று எண்ணிக் கொண்டிருக்கும் அறிவில்லாதவனது செல்வத்தை நானும் என்னுடையது என்னுடையது என்று எண்ணிக் கொண்டிருப்பேன்;

ஏனென்றால், அச்செல்வம் அவனுடையதாயின் அதற்கு அறிகுறியாக அவன் அதனைப் பிறர்க்கு உதவாமலும் அதன் பயனைத் துய்க்காமலும் இருக்கின்றான்; நானும் அச்செல்வத்தை அது செய்யாமலிருக்கின்றேன்.

இருவர்க்கும் அதனிடத்தில் வேறுபாடு யாதும் இல்லையாகலின் என்க.

கருத்து:

பிறர்க்கு ஈயாத பொருள், அதனை உடையானுக்கும் உரிமையுடையதன்று.

விளக்கம்:

இச்செய்யுள் பிறனொருவன் கூற்றாகக் கூறப்பட்டது.

ஏழையென்றார், செல்வத்தைப் பயன்படுத்தி இன்புறலறியாமையின்.

‘அது' வென்றது வழங்குதலுந் துய்த்தலுஞ் செய்யாமையை; "பெயர் கொளவருதல்"1 என்பதனாற் கொள்க. இச்செய்யுள் நகைச்சுவை உடையதாய் நின்றது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Aug-22, 10:37 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே