42ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 42
ஆன்மீக வழியில் அமைதி
எழுத்தாளர் பூ.சுப்ரமணியன்

ஆழ்ந்த உறக்க நிலை அனைவருக்கும் வரும் என்று கூற முடியாது. எடுத்துக்காட்டாக ஒருவன் உலகில் பொருள் சேர்ப்பதிலேயே அல்லும் பகலும் அவனது மனம் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். அவனுக்கு எப்படி ஆழ்ந்த உறக்க நிலை கிடைக்கும். தூக்கத்தில் கூட பொருளுக்காக அவன் மனம் அலைந்து கொண்டுதான் இருக்கும். ஆழ்ந்த உறக்கநிலை வருவதற்கு ஆன்மீக பயிற்சியில் மனம் ஈடுபட வேண்டும். நமது மனம் பக்குவ நிலைக்கு வர வேண்டும். நமக்கு மனம் பக்குவ நிலைக்கு வரும்போது ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கலாம். ஆழ்ந்த உறக்க நிலையை ஆன்மா அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சத்சித்தியானந்தம் என்பதே ஆத்மா. சத் என்றால் நித்தியம், சித் என்றால் அறிவு, ஆனந்தம் என்பது நிறைவு ஆகும்.

நமது பிராணன் அறிவு மற்றும் ஐம்பொறிகளுடன் சேர்ந்துகொண்டு அன்னமய பிராணமய மனோன்மயகோசங்களின் கூட்டு சேர்ந்து கொள்ளும். அவ்வாறு சேர்ந்துகொண்டு அகக்கருவிகளான மனம் போன்ற அந்தக்கரணங்கள் என்ற மனம், புத்தி, சித்தம், அகங்காரம் இவைகளின் விருத்திகள் ஏற்படும். அவ்வாறு விருத்திகள் ஏற்படும்போது அது விஞ்ஞானமய கோசமாகிறது. அதாவது விஞ்ஞானமய கோசம் என்ற நமது அறிவுடம்பாகிறது என்று ஞானிகள் கூறியுள்ளனர்.

நமது ஐம்புலன்களில் ஒன்றான கண்களின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது. அதன் தன்மை மிகவும் ஆழமானது மிகவும் வேகமானது. விருத்திகளை அதிகமாக உடையது. உலகில் காணும் ஒரு காட்சியை ஐம்புலன்களில் ஒன்றான கண்கள் பார்த்தவுடன் காமிராபோல் அவைகள் படம் பிடித்து விடுகின்றது. அதனால் அவைகள் நமது நினைவுகளில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. இதனை கட்புலன் என்றும் கூறுவார்கள்.

மனிதனுடைய மற்ற புலன்களான மெய், வாய், செவி மூக்கு போன்றவைகளை விட இந்தக் கண்களால் அதிக விஷயங்களை கிரகித்துக் கொள்ளகூடிய தன்மை உடையது. ஒரு காட்சியைப் பற்றி கேட்டு அறிவதை விட, கண்களால் பார்த்து மகிழ்வது எவ்வளவு அழகானது. ஆனால் உலகில் காணும் பொருள்களைப் பற்றி கற்றலை விட கேட்டாலே மிகவும் சிறந்தது என்பர். அதைவிட கற்றலை கேட்டலை விட ஆன்மீக வழியில் பார்த்தலே மிகவும் சிறந்தது ஆகும்.

உலகில் காணும் எல்லாவித காட்சிகளையும், சம்பவங்களையும் இறைவன்தோற்றம், அழகிய இயற்கை காட்சி இவற்றையெல்லாம் ஐம்புலன்களின் ஒன்றான நமது கண்களின் வழியாகக் கண்டு படம் பிடித்து பதிவு செய்து நமது மூளைக்கு அவற்றை நன்கு உணர்த்தி விடுகிறது. அவைகளை மனம் தனக்குள் ஆழமாக பதிந்து வைத்து விடுகிறது. மனிதனுக்கு புறக்கண்கள் போன்று அகக்கண்ணும் உண்டு. அகக்கண் என்பது ஏற்கனவே உலகில் நமது புறக்கண்களால் பார்க்கப்பட்ட காட்சிகளை மூளையின் மூலம் அவைகளை நினைவுபடுத்தி நம்மை ரசிக்கவும், நினைக்கும்படியும் வைக்கிறது.

எடுத்துக்காட்டாக நாம் அதிகாலையில் கோவிலுக்குச் சென்று தீபாராதனை பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஏற்கனவே காலையில் கோவிலில் நாம் பார்த்திருந்த அந்த தீபாராதனைக் காட்சியை வீட்டிற்கு வந்த பிறகு அதனை நினைவுபடுத்தி பார்க்கலாம். அவ்வாறு பார்க்கும்போது நமது மனதில் தீபாரதனை காட்சியானது திரையில் காட்சி தோன்றுவதுபோல் நமக்குத் தோன்றுகிறது. அதனை நமது அகக்கண்கள் கொண்டு பார்த்து நம்மால் மகிழ்வதற்கு முடியும். நமக்குத் தேவைப்படும்போது ஐம்பொறிகள் மூலம் இந்த விஞ்ஞான உடல் கூட்டுச்சேர்ந்து கொண்டு இதர கோசங்களைப் பயன்படுத்தி செயல்படுகின்றது. எந்தவிதத்திலாவது ஒரு விஷயத்தை அறிந்து கொள்வதற்கு அது முனைப்புக் காட்டுகிறது. அது காட்சியாக இருந்தாலும், ஒலி வடிவாக இருந்தாலும், வாசனையாக இருந்தாலும் அதனை அறிந்து கொள்வதற்கு முயற்சி செய்கின்றது.

நம்மிடம் இருக்கும் ஆனந்தமய கோசம் என்ற இந்த இன்ப உடம்பு ஆகும். உலகில் உள்ள எட்டுத் திக்கிலும் மற்றும் மேல் கீழ் என எல்லா இடங்களிலும் ஒரு மகிழ்ச்சி ஆனந்தம் இருக்கின்றது என்று தெரியவந்தால் ஆனந்தமய கோசம் அதை அப்படியே தன்னிடம் ஈர்த்துக்கொள்கிறது. இந்த ஆனந்தமய கோசம் இந்த இடம்தான் என்று வரைமுறையில்லாமல் அனைத்து இடங்களிலும் உள்ள இன்பத்தின் வாசனையினை சிறிது நுகர்ந்தால்கூட அதை ஆனந்தமய கோசம் அனுபவிக்கத் தொடங்கி விடுகிறது.

ஆனந்தமய கோசம் என்றால் என்ன என்பது பற்றி சிந்தித்துப் பார்த்தால், நமது நினைவுகளோடு கூடிய இன்பத்தைப் புரிந்து கொள்வது ஆகும். அவ்வாறு புரிந்துகொண்டு மற்ற புலன்களின் அடிப்படையில் எது ஒன்று குறைவாக இருந்தபோதிலும், அந்த மகிழ்ச்சியினை அந்தரங்கமாய் நாம் நினைவுக்கு கொண்டு வந்தால் போதுமானது. அந்த நினைவில் நாம் ஆனந்தம் அடைந்து விடுவோம். ஒரு ஆல விதைக்குள் ஒரு மிகப்பெரிய ஆலமரம் அடங்கியுள்ளதைபோன்று காலம், ஞானம், பரிமாண வளர்ச்சி போன்ற சுகத்திலே மூழ்கியிருப்பதே ஆனந்தமய கோசம் ஆகும். ஆனந்தம் என்று கூறியவுடன் ஆசையினால் வந்த ஆனந்தம் என்பது வேறு, பிரியத்தினால் வந்த ஆனந்தம் என்பது வேறு ஆகும்.

ஆசை என்று கூறியவுடன் அது நிறைவேறாத வரையில் அந்த எண்ணத்தின் அலைகள் சித்தம் என்ற ஆழ்மனதினை விட்டு நீங்காது. அதாவது நம்மை விட்டு எந்த நிலையிலும் நீங்காத நிலையில் நமது மனது அமைதி அடைய முடிவதில்லை. பிரியம் என்பது எண்ணங்களிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டது. அவை ஆசையுடன் தொடர்பு கொள்ளாதது. இது உலகத்தின் இன்பத்தில் இருந்து விடுபட்டு ஞானத்துடன் தொடர்பு கொண்டதுதான் பிரியம் அல்லது விருப்பம். நம் கண்ணுக்குப் புலப்படாத உணரக்கூடிய இறைவன் மீது வைத்திருப்பதே உன்னதமான மேலான பிரியம் ஆகும். உலகில் உள்ள பொருளின் மீதோ அல்லது அதன் தொடர்பான விசயங்களில் அதனைக் கண்டவுடன் உண்டாவது ஆனந்தம். கண்டதை அனுபவத்துடன் உண்டாகும் ஆனந்தம் என்பது வேறு. அதனை பிரமானந்தம் என்று கூறுவர்.

நம் அனைவருக்கும் ஐந்து கோசங்கள் அடங்கிய உடல் உள்ளது. மனிதன் செய்கின்ற வினைகளின் பதிவு நமது சூட்சம உடலில் தங்கி விடுகிறது. அடுத்த பிறவியிலும் அவனை அவன் செய்த வினைகள் தொடர்கிறது. இந்தப் பிறவியிலே பக்குவ நிலைக்குச் செல்வதற்கு ஆன்மீக வழியில் தீவிர முயற்சி செய்தல் வேண்டும், அவ்வாறு முயற்சி செய்யும்போது சூட்சம உடலில் நமக்கு அனைத்து அவயங்களும் செயல்படும். இந்தப் பிறவியில் மனம் பக்குவ நிலைக்கு வரவேண்டுமானால் ஆன்மீகவழியில் நாம் செல்ல வேண்டும். அதாவது ஆன்மீக வழியில் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஆனால் நம்மைத் தவிர வேறு யாருக்கும் வெளியே தெரியாது. ஆனந்தமய கோசத்துடன் பரமாத்மாவுடன் சேர்க்கை ஏற்படக் கூடிய நிலையினை ஆனந்தமய கோசம் கொண்டுள்ளது என்று ஞானிகள் தங்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து அதனைக் கூறியுள்ளனர். (அமைதி தொடரும்)

எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (25-Aug-22, 8:40 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 60

சிறந்த கட்டுரைகள்

மேலே