மாறில்லா மனையறம் தவத்தினும் சிறந்ததாகும் – அறநெறிச்சாரம் 158
நேரிசை வெண்பா
வினைகாத்து வந்த விருந்தோம்பி நின்றான்
மனைவாழ்க்கை நன்று தவத்தின் - புனைகோதை
மெல்லியல் நல்லாளும் நல்லாள் விருந்தோம்பிச்
சொல்லெதிர் சொல்லா ளெனில். 158
– அறநெறிச்சாரம்
பொருளுரை:
அழகிய கூந்தலையும் மெல்லிய இயல்பையுமுடைய நற்குணமுடைய மனைவியும் வந்த விருந்தினரைப் பேணி கணவன் சொல்லுக்கு மாறுபாடாக எதிர்த்தொன்றும் சொல்லாது இருப்பாளாயின்,
தீவினைகளை விலக்கி தன்னிடம் வந்த விருந்தினரைப் பேணி வரும் விருந்தை எதிர்நோக்கி நிற்பவனது இல்வாழ்க்கை தவத்தினும் சிறந்ததாகும். அத்தகைய மனைவி மிகச் சிறந்தவளே ஆவாள்.
குறிப்பு: புனை கோதை – அழகிய கட்டிய கூந்தல்