மேலைப் பிறப்பும் இதுவானால் கூலிக்கு அழுத குறை – அறநெறிச்சாரம் 157

நேரிசை வெண்பா

தாய்தந்தை மக்கள் உடன்பிறந்தார் சுற்றத்தா
ராய்வந்து தோன்றி அருவினையால் - மாய்வதன்கண்
மேலைப் பிறப்பும் இதுவானால் மற்றென்னை?
கூலிக் கழுத குறை. 157

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

மக்கள் வேறொரு தொடர்புமின்றித் தத்தம் வினை காரணமாக உலகிடைத் தம்முள் தாயுந் தந்தையும் மக்களும் உடன் பிறந்தாரும் சுற்றத்தாருமாக வந்து பிறந்து வீடுபேற்றினை அடைய முயலாமல்,

தம்முட் சிலர் வருந்தச் சிலர் மரணமடைந்து, வரும் பிறப்பிலும் அவர் மீண்டும் அங்ஙனம் தோன்றி அவருள் வேறு சிலர் வருந்தச் சிலர் மரணமடைந்தால் அவர் வாழ்க்கை ஒருவர்க்கொருவர் கூலியின் பொருட்டு அழுத காரியமாக முடியுமேயன்றி அதனாலாகும் பயன் வேறு யாது?

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Aug-22, 7:51 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே