நிரப்பிடும்பை மிக்கார்க் குதவஒன் றீதல் சுரத்திடைப் பெய்த பெயல் - பழமொழி நானூறு 169

இன்னிசை வெண்பா

கரப்புடையார் வைத்த கடையும் உதவா
துரப்புடைய மன்னர்க்கே துப்புரவ தல்லால்
நிரப்பிடும்பை மிக்கார்க் குதவஒன் றீதல்
சுரத்திடைப் பெய்த பெயல். 169

- பழமொழி நானூறு

பொருளுரை:

வறியோர்க்கு ஈயாது மறைத்து வைப்பவர்கள் அரிதின் முயன்று, தேடிப் புதைத்து வைத்த பொருள் பகைவரைக் கடிதலுடைய அரசர்க்கே பயன்படுவதல்லாமல் அவன்வழி வந்தவர்க்கும் உதவுவது இல்லை.

அங்ஙனமின்றி, வறுமையால் துன்பம் மிகுந்தவர்களுக்கு பயன்படுமாறு ஒரு பொருளைக் கொடுத்து உதவுதல் பாலைநிலத்தில் சொரியப்பட்ட மழைநீரை ஒக்கும்.

கருத்து:

புதைத்து வைத்தலின்றிப் பொருளை வறியோர்க்கு ஈவாயாக.

விளக்கம்:

கடைவழி, வந்தவர்க்கு ஆகி நின்றது. 'கடையும் உதவா' என்றது கரப்புடையனானமையால். இறக்கும் பொழுது சொல்லலும் ஆகாது; கரப்புடையனாய் இறந்தொழியவே, அவன் வழிவந்தோரால் அறியப்படாது ஒழிவதாயிற்று.

'மன்னர்க்கே துப்புரவு' என்றது உடையோரின்மையால். பூமியில் கிடந்து கண்டெடுக்கப்பட்ட பொருள் அரசர்க்கே உரிமை யுடைமையான் அவர்க்குப் பயன்படுவதாயிற்று. இதனை 'உறுபொருள்' என்பர் ஆசிரியர் திருவள்ளுவர்.

'சுரத்திடைப் பெய்த பெயல் ' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Aug-22, 7:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே