ஓர்த்த கருத்தும் உணர்வும் உணராத மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க - பழமொழி நானூறு 168

நேரிசை வெண்பா

ஓர்த்த கருத்தும் உணர்வும் உணராத
மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க - மூர்க்கன்றான்
கொண்டதே கொண்டு விடானாகும் ஆகாதே
உண்டது நீலம் பிறிது. 168

- பழமொழி நானூறு

பொருளுரை:

ஆராய்ந்து வைத்த கருத்தும், உண்மையை அறியும் அறிவும் இல்லாத மூர்க்கர்களுக்கு ஒரு பொருளையும் சொல்லாதீர்கள்.

நீல நிறத்தை உண்ட பொருள் வேறொரு நிறத்தைக் காட்டுதல் முடியாது. அதுபோல, மூர்க்கன் தான் மேற்கொண்டதனையே மனத்தில் கொண்டு விடான்.

கருத்து:

மூர்க்கர்கள் ஆய்ந்தறிந்த பெரியோர் கூறுவனவற்றைக் கேட்டுத் திருந்தார்.

விளக்கம்:

ஆராய்ந்த கருத்தும் ஆராயும் அறிவும் உடையார் அறிவுடையோராவர். பிறர் கூறுங்கால் அவர் கருத்தின் உண்மையையும் தங்கருத்தின் உண்மையையும் ஆராய்ந்து செம்மை உடையதனை மேற்கொள்ள வேண்டுதலின், உண்மையை ஆராயும் உணர்வு அறிவுடையோர்க்கு இன்றியமையாதது ஆயிற்று.

நீலம் உண்ட பொருள் தன்னை யடுத்த பொருளையும் நீலமாக்குதல் போல, மூர்க்கன் தான்கொண்ட தவறுடைய அப்பொருளையே பிறருக்கும் போதிக்க முற்படுவன்.

'ஆகாதே உண்டது நீலம் பிறிது' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Aug-22, 7:24 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே