நல்லறத்தே நிற்பாரே நற்பெண்டிர் என்பார் – அறநெறிச்சாரம் 160
நேரிசை வெண்பா
(’ட்’ ‘ற்’ வல்லின எதுகை)
மடப்பதூஉம் மக்கட் பெறுவதூஉம் பெண்பால்
முடிப்பதூஉம் எல்லாருஞ் செய்வர் - படைத்ததனால்
இட்டுண்டில் வாழ்க்கை புரிந்துதாம் நல்லறத்தே
நிற்பாரே பெண்டிரென் பார். 160
– அறநெறிச்சாரம்
பொருளுரை:
இளமைப் பருவமாகிய மங்கைப் பருவத்தை அடைவதும்,
புதல்வர்களைப் பெறுவதும்,
பெண்களுக்கு உரிய அணிகலன்களை அணிந்து கொள்தலுமாகிய இவற்றை எல்லா மகளிரும் செய்வர்.
ஆனால், பெற்ற பொருள் சிறிதேயாயினும் அதனைக் கொண்டு இரப்பார்க்கு இட்டு தாமும் உண்டு,
மனை வாழ்க்கைக்குரிய மற்றைய கடன்களையும் விரும்பிச் செய்து கற்பு நெறியின் வழுவாது நிற்பவர்களே பெண்டிரென்று சிறப்பித்துச் சொல்லப்படுவார்.