521 பகைவன் சொல்லால் திருந்தும் பண்பு – பன்னெறி 1
கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
தன்னைத் தன்குணத் தன்மையைத் தேரவே
உன்னு கின்றவ னோங்கிய நட்பினோர்
நன்ன யச்சொல்நம் பாமல்நள் ளார்தினம்
பன்னு மாற்றங்கள் நம்பிற் பயனரோ. 1
– பன்னெறி
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
ஒருவன் தன்னுடைய மெய்யான நிலையையும் பண்பையும் ஆய்ந்துணர நினைத்தால், அவன் நண்பர் சொல்வதை நம்பாமல் பகைவர் சொல்லுவதை நம்புதல் வேண்டும். அப்பொழுதுதான் பயனடையலாம்.
குணம்-பண்பு. உன்னல்-நினைத்தல். நள்ளார்-பகைவர்.