கட்டளைக் கலித்துறை - திருக்கழுக்குன்றக் கோவை
கட்டளைக் கலித்துறை
திரைகடல் ஓடித் திரவியம் தேடென்று செப்புமௌவை
உரைபழு தன்றெனச் சோர்ந்தாள் கழுக்குன்றத்(து) ஓர்மடமான்
அரைபனி நீர்ச்சந் தனம்கொண்டு பாங்கியர் ஆற்றியபின்
இரைகடல் போய்வர எத்தனை நாளென்(று) எழுந்தனளே.
- திருக்கழுக்குன்றக் கோவை
அருமையான எதுகை மோனையோடு (1 3, 5 சீர்களில் மோனை அமைதல் சிறப்பு) அமைந்தும்,
ஒவ்வொரு அடியிலும் ஒன்று முதல் ஐந்து சீர்களிடையே வெண்டளை அமைந்தும்.
ஈற்றுச் சீர்கள் விளங்காய் அமைந்தும், ஒவ்வொரு அடியும் நிரையசையில் ஆரம்பித்து ஒற்று நீக்கிப் 17 எழுத்துகளும், ஈற்றுச்சீர் ஈற்றடி ஏகாரத்தில் முடிந்தும் கட்டளைக் கலித்துறை ஆகிறது.
குறிப்பு:
கட்டளைக் கலித்துறை
எழுத்தெண்ணிப் பாடுகிற பொழுது ஒற்றெழுத்துகள் (புள்ளி வைத்த எழுத்துகள்) அனைத்தையும் விட்டுவிட்டு, உயிர் அல்லது உயிர்மெய் எழுத்துகளை மட்டும் எண்ணி எழுதுவது வழக்கம்.
ஒரு (செய்யுள்) அடி நேரசையில் தொடங்கினால் ஒற்று நீக்கி 16 எழுத்தும், நிரையசை கொண்டு தொடங்கினால் ஒற்று நீக்கி 17 எழுத்தும் இருக்குமாறு பாடுவர்.
ஒவ்வொரு அடியிலும் ஐந்து சீர்கள் இருக்கும்.
வெண்டளை கொண்ட சீர்ப் பிணைப்புகள்.
ஐந்து சீர்களில் இறுதியில் உள்ள சீர் 'விளங்காய்'
(நேர் நிரை நேர் – கூவிளங்காய்,
நிரை நிரை நேர் – கருவிளங்காய்) வாய்பாடு கொண்டிருக்கும்.
ஏனைய நான்கு சீர்களில் 'விளங்காய்' வாய்பாட்டுச் சீர் வராது. மா, விளம், காய் வாய்பாட்டில் முடியும் சீர்கள் மட்டுமே வரும்.
பாடல் பொதுவாக நான்காம் அடியின் ஈற்றுச்சீர் 'ஏ' என்னும் ஏகாரத்தில் முடிவது வழக்கம்.