கடைத்தெருவில் கடவுள்
கடவுள்: பிள்ளயார் கோவிலுக்கு கொஞ்சம் வழி சொல்றீங்களா?
வழிப்போக்கர்: இப்படியே நேரா போனா ஒரு பிள்ளயார் கோவில் வரும். அப்படியே திரும்பி பின்னாடி போனா ஒரு பிள்ளயார் கோவில் வரும். உங்களுக்கு இடது பக்கம் முப்பது அடிகள் நடந்து சென்றால் ஒரு சின்ன பிள்ளையார் கோவில் வரும். உங்களுக்கு வலது பக்கம் அம்பது அடிகள் நடந்தால் பெரிய பிள்ளையார் கோவில் வரும். ஒரு கிலோமீட்டர் முன்னாடியே பின்னாடியோ சைடிலோ போனால் இருபது பிள்ளையார் கோவில்கள் இருக்கு.
கடவுள்: ???
&&&
வழிப்போக்கர்: ஏம்பா, என்ன அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு திருதிருவென்று முழித்திக்கொண்டிருக்கே?
கடவுள்: நான் ஊருக்கு புதுசு. ஜவுளி எடுக்கணும், காலுக்கு செருப்பு வாங்கணும், குளிக்க சோப்பு வேண்டும், வயிறுக்கு சாப்பாடு வேண்டும், இதெல்லாம் எங்கே கிடைக்கும் என்று சுத்திமுத்தி பார்க்கிறேன்.
வழிப்போக்கர்: அப்போ கொஞ்சம் தள்ளி நின்னு பேசு. நல்ல ஆளுய்யா நீ, நீ இப்போ எங்கே இருக்கே தெரியுமா?
கடவுள் : ஏதோ ஒரு பெரிய மாளிகை கீழே
வழிப்போக்கர்: இது மாளிகை இல்லை மூலிகை இல்லை, ஷாப்பிங் மால். அந்த திருமால் வந்தாலும் இங்கே தான் நீ கேட்ட அவ்வளவு சாமானும் கிடைக்கும். இந்த ஐந்து அடுக்கு மாடி மெகா சூப்பர் கடையில் உன் கல்யாணத்துக்கு பொண்ணு கூட கிடைச்சுடும். ஒவ்வொண்ணுத்துக்கும் எங்கும் அலையவேண்டாம். ஆமாம் கிரெடிட் கார்டு , போன் பெ, இருகிறதா?
கடவுள்: அப்படின்னா என்னங்க?
வழிப்போக்கர்: இதோ பாருய்யா, வந்த வழியிலேயே உன் ஊருக்கு திரும்பி போய்விடு. உனக்கும் இந்த உலகத்துக்கும் சம்மந்தமே இல்லை. ஆமாம் உன் ஊர் பேர் என்ன?
கடவுள்:சொர்க்கபுரி.
வழிப்போக்கர்: ஏதோ தருமபுரி , பேல்பூரி, கோலாப்பூரி மாதிரி சொல்ற. சொந்த ஊருக்கு போய் பொழைக்கிறே வழிய பாருய்யா.
&&&
கடவுள்: அய்யா, இந்த தாங்கமுடியாத வெய்யிலில் என் தலை வலிக்குது. இங்கே நாடு வைத்தியர் எவரேனும் உள்ளார்களா?
வழிப்போக்கர்: அதெல்லாம் உங்க நாட்டுலதான். இங்கே வேணும்னா, அல்லோபதி, ஹோமியோபதி, அஷ்டபதி, சத்ரபதி, உமாபதி, திருப்பதி, கணபதி சபாபதி இது மாதிரி தான் கிடைக்கும்.
கடவுள்: ஐயோ , இதையெல்லாம் கேட்கும்போது எனக்கு தலையே சுற்றுகிறது.
வழிப்போக்கர்: ஏன்யா, ஊரிலிருந்து வரசொல்ல, நாட்டு சரக்கு ஒரு லிட்டர் ஊத்திகினு வந்தியா?
கடவுள் அங்கிருந்து மறைந்துவிடுகிறார்.
&&&
கடவுள்: ஏனப்பா, உங்கள் உணவகத்தில் வாழை இலையில் உணவை பரிமாறமாட்டீர்களா, ஏதோ வட்டமாக ஒன்றும் உணவை தருகிறீர்கள்?
சர்வர்: ஏன்யா, கிராமத்திலிருந்து பொறப்பட்டு வந்தே, வரச்சொல்ல, ரெண்டு வாய மரத்தையும் கூட கொண்டுவந்திருந்தா, வாய இலை என்ன, வாய பந்தல் போட்டே சோறு போட்டிருப்பேன் . சரி, மடமடன்னு தின்னுட்டு போ. உன்னைப்போல இன்னும் அம்பது கிராக்கிங்க காத்துக்கினு இருக்காங்க.
கடவுள் சாப்பாட்டை முழுங்கிவிட்டு, அடுத்த பத்து நிமிடங்களில் சொர்கத்தின் AMCயில் அட்மிட் ஆயிட்டாரு.
&&&
கடவுள், பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரிடம்: ஏங்க , இந்தமாதிரி அரக்கி போல தோன்றும் பெண்களை படத்தில் நடிக்க வைக்கிறார்கள்?
வழிப்போக்கர்: யோவ் , சாவுகிராக்கி, அது அரக்கியும் இல்ல கிறுக்கியும் இல்ல, இவைதான் இந்த படத்தின் கதாநாயகி. நீதான் கிறுக்கன் மாதிரி கேள்வி கேக்கறே.
&&&
கடவுள், சுண்டல் விக்கிற பையனிடம்: தம்பி, இந்த பகல் வேளையிலே அங்கங்கு படகுக்கு பின்னால ஜோடிஜோடியாக கட்டிப்பிடிச்சு முத்தம் தராங்களே.இவங்களை யாரும் கேட்கமாட்டார்களா?
சுண்டல் விக்கிற பையன்: அட கடவுளே, இதுகூட உங்களுக்கு தெரியாதா. ஒரு ரெண்டு நிமிசம் ஆள் நடமாட்டம் இல்லைனா, க்ளைமாக்ஸுக்கே போய்டுவாங்க. நீங்க இந்தமாதிரி ஒன்னும் ஜல்சா பண்ணதில்லயா?
கடவுள், அங்கிருந்து செருப்பும் இல்லாத காலுடன் ஓட்டம் எடுத்தார். சுண்டல் விற்கும் பையன் மிகவும் வியப்புடன் ஓடியவரை பாத்து திகைத்தான், ஏன்னா , ஓடிக்கொண்டிருக்கும்போதே கடவுள் மறைந்துவிட்டார்.
&&&&
செல்போன் சிம் கடையில்
கடைக்காரர்: ஆதார் கார்ட் காப்பி தாங்க
கடவுள்: எனக்கு எதுக்குப்பா ஆதார், கீதார் எல்லாம், நான்தான் இவ்வுலகை படைத்த கடவுள்
கடைக்காரர்: சாமி, நீங்க மூன்றும் அறிந்த கடவுளாக இருங்க, அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை. அந்த கடவுளே வந்தாலும் ஆதார் கார்ட் இல்லைனா, நோ சிம், நோ டாக்கிங், நோ இன்டர்நெட்.
கடவுள்:???
&&&
சலூனில்
முடிவெட்டுபவர்: அட இன்னாப்பா ரோதனையா பூட்சி. ஒருமணிக்கு மேல உன் முடிய வெட்டிக்கினுகீறேன். கொறஞ்ச மாதிரியே தெரியல. நாலு பக்கெட்டுல முடி ரொம்பிடிச்சி.
கடவுள்: இது வணங்கா முடி. யாருக்கும் பணியாது
முடிவெட்டுபவர்: தோ பாரு. இந்த சிவாஜி கணேசன் வசனம் எல்லாம் வேண்டாம். எடுத்த முடிக்கு ஐநூறு ரூபாய் கொடுத்துட்டு இடத்தை காலி பண்ணு. போவசொல்ல உன் செல்போன் நம்பரை கொடுத்துட்டு போ. விக் தயார் செய்ய உன் தல முடி தேவை பட்டா, காண்டாக்ட் பண்றேன்.
கடவுள்: நீ இப்போது முடி எடுத்ததே, என் விக்கிலிருந்து தான். என் இயற்கை முடியை பார்வதிக்கு ஒரு போட்டியில் தோற்றதால் பிய்த்து கொடுத்துவிட்டேன்.
முடிவெட்டுபவர்:???
&&&