விளக்கு எலிகொண்டு தனக்குநோய் செய்து விடல் - பழமொழி நானூறு 189

இன்னிசை வெண்பா

எய்தா நகைச்சொல் எடுத்துரைக்கப் பட்டவர்
வைதாராக் கொண்டு விடுவர்மன் அஃதால்
புனற்பொய்கை ஊர! விளக்(கு) எலிகொண்டு
தனக்குநோய் செய்து விடல். 189

- பழமொழி நானூறு

பொருளுரை:

நீர் நிறைந்த பொய்கை சூழ்ந்த மருதநிலத் தலைவனே! பொருந்தாத இகழ்தற்குரிய சொற்களைப் பிறரால் எடுத்து உரைக்கப்பட்டவர், அவர் தம்மை இகழ்ந்ததாகக் கொள்வர் அறிவிலார்;

அங்ஙனம் இகழ்ந்ததாகக் கொள்ளுதல் விளக்கினை எலி இழுத்துச் சென்று (தம்மைப் பிறருக்கு விளக்கிக் காட்டுதலால்) தனக்குத் துன்பத்தினைச் செய்துகொள்ளுதலை ஒக்கும்.

கருத்து:

அறிவிலார் துன்பத்தைத் தாமே தேடிக் கொள்வர்.

விளக்கம்:

எலி விளக்கினைக் கொண்டு தன்னை விளக்குதலால் துன்பத்தைத் தானே தேடிக் கொள்ளுகின்றது.

அறிவிலாரும் தம் பழியைக் கூறாதிருக்கவும், பிறர்பழியைத் தம்மேலிட்டுத் தமக்குள்ள பழியை வெளிப்படுத்தி அதனால் துன்பத்தினை அடைவர்.

தம்மிடம் இகழ்தற்குரிய செயல்கள் உண்மையின், இகழ்வார் இகழ்வன யாவும் தம்மைக் குறித்ததே யென நினைப்பர் அறிவிலார்.

'விளக்கு எலி கொண்டு தனக்கு நோய் செய்துவிடல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Sep-22, 6:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே