தூய்மை மனத்தவர் தாமே தமியர் புகல்வேண்டாம் - பழமொழி நானூறு 190

நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு)

தூ'ய்'மை மனத்தவர் தோழர் மனையகத்தும்
தாமே தமியர் புகல்வேண்டா - தீமையான்
ஊர்மிகின் இல்லை கரியோ ஒலித்துடன்
நீர்மிகின் இல்லை சிறை. 190

- பழமொழி நானூறு

பொருளுரை:

தூய்மையான மனத்தை உடையவர்கள் நண்புடையார் வீட்டிற்குள்ளேதான் என்றாலும் தாமாகத் தனித்துச் செல்லுதல் வேண்டாம்.

ஓசையுடனே நீர் மிகுமாயின் அதனைத் தடுத்து நிற்கும் அணை இல்லையாதல் போல, இவன் தீயசெயல் செய்தான் என்று ஊரிலுள்ளார் மிகுத்துக் கூறுவாராயின் செய்யவில்லை என்று சான்று கூறுவார் ஒருவரும் இலர்.

கருத்து:

நல்லோர் தோழர் மனையிடத்தும் தனியாகப் புகுதல் கூடாது.

விளக்கம்:

'தோழர் மனையகத்தும்' என்றமையால், ஏனையார் மனையகத்துப் புகுதல் வேண்டாமை பெறப்படும்.

கரி இல்லை என்றது ஊரார் கூறியது மெய் அன்றிப் பொய் எதுவாயினும் சான்று கொண்டு தீர்த்தல் இயலாது என்பதாயிற்று.

'நீர் மிகின் இல்லை சிறை' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Oct-22, 8:14 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே