மின்னேர் மருங்குலாய் ஏவலாள் ஊருஞ் சுடும் - பழமொழி நானூறு 191

நேரிசை வெண்பா
(’ண்’ ‘ன்’ மெல்லின எதுகை)

பண்டுருத்துச் செய்த பழவினை வந்தெம்மை
இன்றொறுக் கின்ற தெனவறியார் - துன்புறுக்கும்
மேவலரை நோவதென்? மின்னேர் மருங்குலாய்!
ஏவலாள் ஊருஞ் சுடும். 191

- பழமொழி நானூறு

பொருளுரை:

மின்னலை யொத்த இடையை யுடையாய்!

பிறர் ஊரைக் கொளுத்தும் பொருட்டு ஒருவனால் அனுப்பப்பட்ட ஏவலாளன் ஏவியவனது ஊரையும் கொளுத்திவிடுவான்.

ஆதலால், முன்பிறவிகளில் மிகுதியாகத் தாம் செய்த பழைய தீவினை இப்பிறப்பில் வந்து எம்மைத் தண்டிக்கின்றது என்று அறியாராய் ஏவலாளாக நின்று துன்புறச் செய்யும் பகைவரை வெறுப்பது எது கருதி?

கருத்து:

பிறர் தம்மைத் துன்புறுத்துவது தாம் செய்த பழவினைப் பயனே என்றறிந்து அவரை நோவாது ஒழிதல் வேண்டும்.

விளக்கம்:

'வந்து' என்றார், கன்று, பல்லாவுள் தாய் நாடிக்கோடல்போல் செய்தானைத் தானே அடையும் ஆற்றலுண்மை பற்றி.

ஒறுத்தல் என்றது, தண்டித்தலை.

உடம்பை வருத்துதலுக்கு வருத்தல் என்று கூறுவது மரபாம்.

ஒறுத்தல் என்பது செய்த தீமைக்குத் தக்கவாறு துன்புறுத்தலுக்கு அல்லது தண்டித்தலுக்கு வழங்கும் மரபுச் சொல்லாம்.

'துன்புறுக்கும் மேவலர்' என்பது பழவினை ஒருவனுக்கு இன்பத்தையோ அன்றித் துன்பத்தையோ ஊட்டின் பிறர் வாயிலாக நின்று ஊட்டும் என்பது அறிவித்தற்காம்,

யான் செய்த வினையால் வரற்பாலதாகிய இஃது இவர் வாயிலாக வந்தது என்று தான் செய்த வினை காரணமாயிருக்கத் தண்டிக்கும் அவரை நோவதற்கிடனின் றென்பார் 'நோவது என்' என்றார்.

ஏவலாள் ஊருஞ்சுடும் என்றது, தன்னால் ஏவப்பட்டானே தனது ஊரைக் கொளுத்துவான் என்பது கருதி.

அதுபோலத் தன்னாற் செய்யப்பட்ட வினையே தன்னை ஒறுக்கும் என்பதாம்.

'ஏவலாள் ஊருஞ் சுடும்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Oct-22, 8:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே