சரித்திரமான நாம்

சரித்திரமான நாம்
********************
முன்னுரை எழுதித் தந்த
முதல்வனின் வாழ்த்துப் பெற்று
தன்னுயிர் என்னும் தூய்மை
தாங்கிய புத்தக மாகி
நன்னிலப் பதிப்ப கத்தில்
நல்லதோர் வெளியீ டாக
அன்னையும் வலிசு மக்க
அவசர மாக வந்தோம்.
*
சதிகளில் வீழ்ந்து சிக்கிச்
சரித்திரம் படைக்க எண்ணி
நதிக்கரை நாணல் போன்று
நடமிடக் காலைத் தூக்கி
அதிசய மாக ஆடி
அதியுயர் வீழ்ச்சி காண
விதிக்கரம் எழுதி வைத்த
விசித்திரப் பிறவி யானோம்
*
எல்லையைத் தொட்டுக் கொள்ள
இயந்திர கதியில் நாளும்
முல்லையும் வேம்பும் காலில்
முட்களும் கற்களும் குத்தும்
தொல்லைகள் தாங்கி ஓடும்
தொடர்கதை யாக வாழ்வில்
நல்லவர் வேடம் பூண்டும்
நல்லவ ராக வில்லை
*
கள்ளமும் கபடும் கொண்டு
கனிவொடு பொய்கள் பேசி
உள்ளமும் தூய்மையி ழந்த
ஒவ்வொரு வரையும் உயர்த்தி
வள்ளமும் துடுப்பும் போல
வளமுடன் ஓட வைக்கும்
வெள்ளமாய் நிறைந்த மண்ணில்
விரக்தியாய் வாழ்ந்து கெட்டோம்
*
நேர்மையும் பணிவும் கொண்ட
நெஞ்சுடன் வாழ்வோர் தம்மைக்
கூர்முனை வாள்கள் போன்ற
குத்திடும் வார்த்தை யாலே
நார்நா ரென்றே கீறும்
நாக்குகள் வாழப் பக்கச்
சார்புடன் நடத்து வார்முன்
சரித்திர மாகிப் போனோம்
**
மெய்யன் நடராஜ்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-Oct-22, 2:20 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 68

மேலே