ஒரு சில உறவுகளின் குணம் மாறுவதில்லை

ஒரு சில உறவுகளின் குணம் மாறுவதில்லை கேயென்னார்
நாங்கள் வாழ்ந்து வளர்ந்தது எல்லாம் கிராமத்தில் எங்கள் குடும்பம் கூட்டு குடும்பமாக ஒரு பெரிய வீட்டில் இருந்தது. என் அப்பாவும் அம்மாவும் தாத்தா விட்டு சென்ற நிலபுலன்களை பார்த்து கொண்டு இருந்தனர். நான் படிப்பிற்காக பட்டணம் சென்றேன். பொறியியல் கல்வி படித்தாலும் நிலத்தின் பராமரிப்பில் எனக்கும் ஆசை உண்டு.அப்பாவுடன் சிறுவயதில் டிராக்டரில் நிலத்திற்கு சென்று அங்கு நடக்கும் எல்லா வேலைகளையும் பார்த்து என் விவசாய கல்வி எனக்கு அந்த ஆசையை தந்திருக்கலாம். அப்பாவிற்கு ஒரு தம்பி அதாவது என் சித்தப்பா.என்னிடம் மிக பிரியமாக இருப்பார்.நான் சில நாட்கள் படிப்பதற்காக கண் முழித்து இரவு நெடுநேரம்வரை படிக்கும் சமயம் அவரும் கண் முழித்து என்னோடு கூடவே உட்கார்ந்து நான் படுக்க சென்றபின் தான் அவர் தூங்கச் செல்வார். என் அம்மா கொடுத்த சூடான காப்பியை அவர் ஒரு பிளாஸ்கில் வைத்து எனக்கு கொடுத்து என்னிடம் மிக பிரியமாக இருப்பார். அப்பாவும் அம்மாவும் அவருக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து கல்யாணம் செய்தனர். சித்தியும் என்னிடம் அன்பாக தான் இருந்தார்.அப்பா சி தன் தம்பிக்கு தாத்தா எழுதிவைத்த நிலத்தையும் தனது நிலத்துடன் சேர்த்து வைத்து அதிலும் பயிர் செய்து வந்தார்.
சித்தப்பாவிற்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தன. அவர்களை அப்பவே வளர்த்து அவர்களின் படிப்பிற்கும் வழி செய்தார். நாங்கள் எல்லோரும் ஒன்றாக அரண்மனை போல உள்ள ஒரு வீட்டில் இருந்தோம்.இந்த வீடு தாத்தா அப்பாவிற்காக கட்டிய வீடாகும்.மூன்று ஏக்கர் நிலத்தில் பதினைந்து அறைகளுடன் மிக பெரிய வீடு.
அது கிரமத்திற்கே பெரிய வீடு என்ற புனைபெயருடன் விளங்கியது.
யார் எப்பொழுது வந்தாலும் அங்கு உணவு கிடைக்கும்.பஸ் வர தாமதமனால் எல்லோரும் சாப்பாட்டிற்கு பெரிய வீட்டிற்கு செல்லுங்கள் என்று கூறுவது வழக்கம்.
என் அப்பாவின் கடின உழைப்பால் எல்லா நிலங்களிலும் நல்ல விளைச்சல் வந்து நல்ல பணமும் சேர்ந்திட நாளைடைவில் எங்கள் வீட்டை பண்ணையார் வீடு என்று அழைக்க ஆரம்பித்தனர். அப்பாவிடம் வேலை செய்த யாவரையும் அப்பா நல்ல முறையில் நடத்தி அவர்களின் குடும்பங்களையும் கவனித்தால் அவரிடத்தில் எல்லோருக்கும் மதிப்பு உண்டாயிற்று.எதை செய்வதனாலும் அப்பாவிடம் வந்து கேட்டு அவர் சொல் படி நடப்பார்கள். ஊரில் பல நில சொந்தக்காரர்களும் அவரிடம் வந்து அறிவுரை கேட்பதுண்டு.
சித்தப்பாவிற்கும் அவரது மனைவி குழந்தைகளுக்கும் இது சில நேரங்களில் பொறாமையை தூண்டிவிடுவதுடன் மன வருத்தத்தையும் ஏற்படுத்தியது. இதுவே சிலநேரங்களில் சிறு சண்டையாக மாறுவதும் உண்டு. சித்தப்பாவிற்கு அண்ணனிடம் மதிப்பும் மரியாதையும் உண்டு. சித்தியும் பிள்ளைகளும் கூறுவதை கேட்டு அவரும் அப்பாவிடம் வந்து நானும் விவசாயம் செய்கிறேன் எனக்கும் எல்லாம் தெரியும் எனக் கூறி வயல்வெளிக்குச் சென்று வேலையாட்களிடம் அதட்டி இதை செய் அதை செய் எனக் கோபத்துடன் கூற,அவர் கூறும் செயல்கள் யாவும் சரியாக இல்லாததால் அவர்கள் அப்பாவிடம் வந்து முறையிடுவார்கள்.
அப்பா சித்தப்பாவை அழைத்து நான் தான் பார்த்து கொள்கிறேனே நீ ஏன் இதில் தலையிடுகிறாய் உனக்கு தெரியாததை செய்யாதே வேலை ஆட்கள் உன்னை மதிக்க மாட்டார்கள் . விளைச்சலும் பாதிக்கப்படும் என மிக பொறுமையுடன் கூறுவார். அன்று அதை ஏற்று கொண்டாலும் சித்தியின் உபதேசமும் மகன்களின் பேச்சும் அவரை மீண்டும் மாற்றி எனக்கு தெரியும் என்ற மனநிலைக்கு தள்ளி விடும்.
மீண்டும் வீட்டில் சண்டைகள் துவங்கும்.இவ்வாறு பல வருடங்கள் உருண்டோடின. சித்திக்கும் சித்தப்பாவிற்கும் பிள்ளைகள் வளர்ந்து விட்டதும் ஒரு எண்ணம் மனதில் விருட்ஷமாக தலை எடுத்து அது அவர்கள் செய்கையிலும் பேச்சிலும் தெரிய ஆரம்பித்தது.அண்ணாவிடம் ஆகும் செலவிற்கு கணக்கு கேட்கும் அளவிற்கு வந்தது. பேச்சு தடித்து என் பங்கில் உள்ள நிலம் அதற்கு உண்டான செலவு வரவு என கூறும் அளவிற்கு வர,அப்பாவின் கோபமும் ஏறியது, என்ன நினைத்து இவ்வாறு கேட்கிறாய் உன்னது என்னது என்று எப்பொழுதும் நான் பிரித்து பார்க்காமல் எல்லாவற்றையும் நன்றாக பராமரித்து பெரிய அளவின் வளர்ந்தபின் என்ன புதிய பழக்கம் எனக்கூறி அவர்களை கடுமையாக கண்டித்தார்.
பிள்ளைகள் சித்தி ஆகியோர் சித்தப்பாவை தூண்டிட அவர் அப்பாவிடம் இல்லை எனக்கு என்று உள்ளதை கொடுத்து விடு இல்லாவிட்டால் கோர்ட் வரை செல்ல வேண்டி இருக்கும் என ஒரு நாள் சொல்ல,அப்பாவிற்கு இடியாக அந்த சொல் வந்தது.
அதுவே அவரைப் படுக்கையிலும் சாய்த்தது. மனமும் ஒரு நிலை இல்லாமல் தவித்திட உடல்நிலை மோசமாகி அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கும் அளவிற்கு வந்தது. தங்களால் தான் இது நடந்தது என அறிந்தும் சித்தியும் சித்தப்பாவும் பிள்ளைகளுடன் வீட்டில் இருந்தனர்.ஒரு நன்றிக்கடனாக கூட வந்து அவரை பார்க்கவில்லை.
நானும் அம்மாவும் அவர் பக்கத்தில் இருந்து அவரை கவனித்து கொண்டோம். அப்பா சில நாட்கள் அம்மாவிடம் மனம் திறந்து எவ்வளவு நன்றாக பார்த்து கொண்டேன் என்னிடம் இவ்வாறு நடந்து கொண்டானே என வருந்தியது உண்டு.
அம்மாவும் போகட்டும் அதை மனதில் போட்டு கொள்ளாதீர்கள் நீங்கள் வீட்டிற்கு வந்தவுடன் அவனுடைய பங்கை கொடுத்து விடலாம் என மெல்ல கூறிட அவன் அதை நாசமாக்கி விடுவான் உனக்கு தெரியாதா. அவனால் முடியாது வெளியாட்கள் அவனை மதிக்கமாட்டார்கள் நிலம் தரிசாகி விடும் நாம் கட்டிக் காத்ததெல்லாம் தெருவிற்கு வந்துவிடும் என ஒரு தீர்கதரிசி போல் கூறுவார்.இந்த மனஉளைச்சல் சில கோளாறுகளை உடம்பில் கொண்டு வந்தது.அப்பா வீட்டிற்கு வந்தாலும் முன் போல் செயல் பட முடியவில்லை.
நிறைய ஓய்வும் எடுக்க வேண்டி இருந்தது. வேலை ஆட்களிடம் நம்பி நிலங்களை கொடுத்து விட்டு அவர்கள் செய்வதை கவனிக்க சில நம்பிக்கையான ஆட்களை வைத்து விவசாயத்தை நடத்தினார்.
உறவுகள் யாவருக்கும் சித்தப்பாவும் அப்பாவும் சண்டை போட்டு கொண்டதும் அவர்களின் மனஸ்தாபமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.சிலர் சித்தப்பாவிடம் அவரது அறிவின்மையை பயன்படுத்தி அவருடைய நிலங்களை மிக குறைந்த விலையில் குத்தகை எடுத்து பராமரிக்கலானார்கள். அப்பாவிற்கும் அம்மாவிற்கும் இந்த செய்தி வேலை ஆட்கள் மூலம் தான் தெரிந்தது. அப்பா மிக வேதனை அடைந்தார். எனக்கு கல்யாணம் செய்து ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் அப்பாவிற்கு வர அதில் தனது முழு கவனத்தைச் செலுத்தி, நடந்தவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளினார்.அவரது பழைய உற்சாகம் மீண்டும் துளிர் விட்டது. எனக்கு ஒரு நல்ல இடத்தில பெண் எடுத்து, அவள் வந்து மீண்டும் மகிழ்வை கொண்டு வருவாள் என்ற எதிர்பார்ப்புடன் உறவில் உள்ளவர்களை பார்க்காமல் வெளியே வரன் தேட ஆரம்பித்தார்.
திருமணம் நிச்சியமாகி கிராமத்து மக்களுக்கு தெரிவித்து கிராமம் முழுக்க பார்க்கும் வண்ணம் வெகு விமர்சையாக நடத்தினார். இதற்கு சித்தப்பாவும் குடும்பமும் சந்தோஷித்தாலும், கிராமமே புகழ்வதை கேட்டவுடன் சித்தப்பாவின் குடும்பத்தினருக்கு ஒரு காழ்ப்பு உணர்ச்சியை விதைத்தது. என் கல்யாணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் சித்தப்பாவும் அவர் குடும்பமும் என்னிடமும் அப்பாவிடமும் சகஜமாக உரையாடி எல்லோரும் ஒரு குடும்பம் என்று எல்லோரிடமும் சொல்லி திரிந்தனர்.ஆயினும் அவர்களுக்கு அப்பாவின் பெயரை கூறி அவரின் தம்பி என்ற ஒரு நிலையில் தான் மரியாதையை கிடைத்ததே தவிர அவர்களுக்கு தனியே யாரும் மரியாதையை செலுத்தவில்லை. சித்திக்கு இதில் மிக வருத்தம்.அவள் சித்தப்பாவிடம் உங்கள் நிலங்களை உங்கள் பெயரில் மாற்றி நமது இஷ்டம் போல் வாழவேண்டும் என அடிக்கடி கூற அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்றது போல ஒருநாள் இந்த பேச்சு வெளியே வந்தது.அப்பாவிற்கு இதை கேட்டவுடன் கோபம் தலைக்கு ஏறியது. அப்பா சித்தப்பாவிடம் அன்று மாலையில் என்னடா கணக்கு பிள்ளையிடம் கணக்கெல்லாம் கேட்ட போலிருக்கு என்ன ஆச்சு அப்பா அம்மா உன்னை என்கிட்டே விட்டு போனப்புறம் நான் உனக்கு செய்ததெல்லாம் மறந்து போச்சா உனக்கும் ஒரு கல்யாணம் செய்து வைத்து உங்கள் குழந்தைகளையும் பராமரித்து எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்தேன் இப்ப என்ன புதுசா என வினவ, அவர் குடும்பமும் அவருடன் சேர்ந்து கொண்டு எங்களுக்கு உண்டான பங்கைத் தானே நாங்கள் கேட்கறோம் என மொழிந்திட அப்பாவின் கோபம் எல்லையை தாண்டியது. அப்பா அன்றிரவு தூங்கச் செல்ல வெகு நேரம் ஆகியது.
அவர்கள் சொன்ன வார்த்தைகள் அவருக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது.கோர்ட் கேஸ் எல்லாம் அவருக்கு ஒன்றும் புதியதில்லை,ஆனால் தன்னுடைய தம்பி அதை கூறும் நிலை வந்ததே என நினைக்கையில் அவருக்கு மனம் தவித்தது.
நான் பட்டணத்தில் மனைவியுடன் இருக்கையில் என்னை அம்மா கடிதம் எழுதி உடனே வர சொல்லியதும் வந்தபின் நடந்தவற்றை எனக்கு அவர்கள் கூறியதும் எனக்கும் மிக வேதனையை அளித்தது.
நான் என் சித்தப்பாவையும் அவர் குடும்பத்தையும் ஒரு வார்த்தை கேட்பதாக கூறி அங்கு சென்றேன்.பேச்சு வேறு திசையில் சென்று மிக கோபத்துடன் வெளியே வந்தேன்.வளர்க்கும் ஒரு மிருகத்திற்கு கூட நன்றி இருக்கிறது என் உள்மனம் கூவிட நான் மறுமுறை உள்ளே சென்று அதையும் வார்த்தைகளில் அவர்களுக்கு தெரிவித்தேன்.
அடுத்த சில வாரங்களில் ஒரு கோர்ட் நோட்டீசும் வந்திட நாங்கள் எங்கள் வக்கீலுடன் கலந்து பேசி கேஸ் வாதாட ஆயத்தமானோம்.
அப்பாவிற்கு இந்த செயல்கள் எல்லாம் மனதை வேதனையில் முழுக்கி உடல் நிலையை பாதித்தது. சில நாட்கள் மருத்துவ மனையில் இருந்தபின் அவர் நலமடையாமல் உயிர் பிரிந்தது.
அம்மா கூடவே இருந்ததால் அவர் உயிர் பிரியும் வரை கூறியது எல்லாம் என் தம்பியை தெருவிற்கு வர வைப்பார்கள் என்பது தான் என்று என்னிடம் கூறினாள். அப்பா போன பிறகு அம்மாவை என்னுடனே இருக்க சொல்லி அழைத்து வந்துவிட்டேன். அப்பாவின் அகால மரணம் எங்களை மிகவும் உலுக்கி விட்டது. சித்தப்பாவும் அவர் குடும்பமும் எங்கள் சுற்றத்தாரும் எங்கள் நிலங்களையும் பார்த்து கொள்வதாக சொன்ன பொழுது,எங்கள் குழம்பிய நிலையில் அம்மாவும் நானும் அதற்கு சரி என தலை அசைத்தோம்.
சில மாதங்கள் சென்ற பின் எங்கள் நிலங்களை பார்த்து கொண்டிருந்த எங்கள் அப்பாவிற்கு நம்பிக்கையான ஒரு சிலர் வீட்டிற்கு வந்திருந்தனர்.அவர்கள் அப்பாவின் மறைவு ஒரு பெரிய இழப்பு என்பதை பல வழிகளில் எங்களுக்கு உணர்த்தினார்கள்.
சித்தப்பாவும் அவர் குடும்பமும் இருக்கும் நிலங்களை நன்றாக பராமரிக்காததால் அவைகள் தரிசாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது என கூறிட என் கோபம் மேலும் அதிகமானது. இந்த செய்தியை கேட்டவுடன் நான் அம்மாவுடன் கிராமத்திற்கு சென்று சித்தப்பாவிடம் பேசுவதாக கூறி அவர்களை அனுப்பினோம்.
சில மாதங்களில் என் மனைவி ஒரு குழந்தையை கருத்தரிக்க அவர்களை கவனித்து கொள்வதில் ஒரு வருடம் ஓடியது பின் குழந்தை பிறந்ததும் அந்த மகிழ்ச்சியில் அம்மாவும் நானும் நிலத்தை பற்றி யோஜிக்கவே இல்லை.
சில ஆண்டுகள் இவ்வாறு சென்றது பின் குழந்தைக்கு எங்கள் குலதெய்வத்திடம் முடி இறக்கி விடுவதற்காக கிராமத்து பக்கம் சென்றபொழுது நாங்கள் சித்தப்பாவின் குடும்பத்தினர்களின் உண்மை ரூபத்தையம் அவர்களின் வினையான செயலையும் அறிந்தோம்.தாத்தாவின் உயில் படி அப்பாவிற்கு எழுதி வைத்த நிலங்களையும் இருவருக்கும் பாதி பாதி உரிமையுள்ள வீடுகளையும் நிலங்களையும் அவர்களின் பெயரில் அனுபவித்து கொண்டிருந்தனர்.அப்பா உயில் எழுதாமல் சென்று விட்டதால், அங்குள்ள அதிகாரிகளின் உதவியுடன் சிலவற்றை தங்கள் பெயருக்கு மாற்றி விட்டனர்.அம்மா என்னிடம் நீ சண்டையிடவோ கோர்ட்டுக்கு சென்று கேஸ் போடவோ வேண்டாம் அது நம் குடும்பத்திற்கு மிக கேவலமாக இருக்கும்.உன் அப்பாவின் தம்பியே வைத்து கொள்ளட்டும் என கூறினார்.எனக்கு அவ்வாறு அடங்க முடியவில்லை அப்பொழுது ஒன்றும் கூறாமல் குழந்தையுடன் வீட்டிற்கு வந்தோம். என் மனதில் சித்தப்பாவின் குடும்பம் செய்த யாவையும் ஒரு புயலை உண்டாக்கி இருந்தது. எனக்கு தெரிந்த வக்கீல்களை காண
அம்மாவுடன் சென்று நடந்தவற்றை கூற அவர்களும் எங்களிடம் கோர்ட்டுக்கு செல்லுமாறு கூறினர்.கிராமத்தில் உள்ள நல்ல மனம் கொண்டவர்களும் எங்கள் உறவினரும் என்னிடம் என்னப்பா சித்தப்பா ஏன் இப்படி செய்தார்.அவரையம் அவர் குடும்பத்தையும் நீ கோர்ட்டில் சந்தித்து உன் பக்கம் உள்ள ஞாயத்தை நிலைநாட்ட வேண்டும் என கூறினார்கள். அம்மா முதல் முறையாக என்னிடம் கோர்ட்டுக்கு சென்று அப்பாவின் பகுதியையும் தாத்தா உயில் படி வைத்தவற்றையும் வாதாடி வாங்கி கொண்டு வா என கூறினாள். கோர்ட் கேஸ் என பல வருடங்கள் போராடி எங்கள் உரிமையை நிலைநாட்டினோம்.
அதில் சில சிக்கல்கள் முளைத்தன சில நிலங்கள் மிக உயர்வான விலையில் கோர்ட்டினால் நிர்ணயிக்க பட சித்தப்பாவும் அவர் குடும்பமும் அவற்றில் பலவற்றை தன் பங்கிற்கு வேண்டும் என வாதாட, அம்மா அவளின் பெருந்தன்மையால் அவர்களுக்கு அதை விட்டு கொடுக்கும் படி என்னிடம் சொல்ல சித்தப்பாவின் வாரிசுகள்
நல்ல விளைச்சல் நல்ல வீடுகள் நல்ல தோட்டங்கள் என எல்லாவற்றையும் எடுத்து கொண்டு எங்கள் பங்கிற்கு ஒரு சொற்பமான விலையுள்ளவற்றை கொடுத்து மீண்டும் தங்கள் தீய எண்ணங்களை காண்பித்தனர்.அம்மா எல்லாம் ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என கூறி அவர்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்து விட்டு என்னுடன் வந்துவிட்டாள். எங்கள் உறவுகளில் சிலர் இந்த அநீதியை எதிர்த்து என்னிடம் வந்து என்னப்பா சித்தப்பா எப்படி செய்து விட்டாரே என வருத்தப்பட்டனர். காலம் உருண்டோடியது சித்தப்பாவிற்கு உடல் நிலை மோசமாக இருக்கிறது என அறிந்தோம்.குடும்பமும் சேராமல் ஓரோர் இடத்தில் பிரிந்து வாழ்வதாக கேள்விப்பட்டோம்.சித்தி யாரும் இல்லாமல் தனியே சித்தப்பாவுடன் இருப்பதாகவும் எங்கள் நிலத்தை பார்த்து கொள்பவர்கள் மூலம் அறிந்தோம்.வெளியில் கேட்டதெல்லாம் நினைத்தபொழுது ஆண்டவன் அவர்களுக்கு நியதியை கொடுத்ததாக தோன்றினாலும், உள் மனதில் கோபம் தணியவில்லை மேலும் வளர்ந்தது. அம்மா அந்த பெரிய வீட்டில் அவர்கள் தங்குவதை தடை ஏதும் சொல்லாமல் அப்பா இருந்தாலும் இதை தான் விரும்பி இருப்பார் என கூறி அனுமதித்திருந்தார்
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் அந்த குடும்பத்துடன் உறவே இல்லாமல் வைராக்கியமாய் இருந்து விட்டேன். . சித்தப்பாவிற்கு வயதாகி இப்பவோ அப்பவோ இருப்பதாக கேள்வி பட்டேன் இவ்வாறு பல செய்திகள் வந்து கொண்டிருக்கும். நான் அதை லட்சியம் செய்வதில்லை.மனைவி வழி உறவுகள் ஊரிலிருந்து வரும்போது சும்மா வருவதில்லை. சித்தப்பா குடும்பத்துச் செய்திகள் நான்கைந்து கொண்டு வந்து என் மனைவியின் காதில் ஓதி விட்டு செல்வார்கள்.
என்னுடைய குழந்தை பெரியவளாகி கல்லூரிக்கு சென்று விட்டாள். நான் இன்னும் பதினைந்து வருடங்களில் என் குழந்தையின் கல்யாணம் நடந்து விடும் அதன் பின்னர் ஓய்வு பெறப்போகிறேன் என்று மனதில் தீர்மானம் செய்து கொண்டேன். என் மனைவிக்கு கொஞ்சம் சபலம், என் சித்தப்பா செய்த தவறை உணர்ந்து ஏதோ சொத்தில் கொஞ்சம் கொடுத்தாலும் கொடுக்கலாம், அவளுடைய உறவுகள் வேறு அதை கொஞ்சம் அழுத்தமாகவே அவள் காதில் போட்டு விட்டு போயிருந்தனர். நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள். உங்க சித்தப்பாவை போய் பார்த்துட்டு வந்துடுவோம். இவளின் நச்சரிப்பை தாங்க முடியாமல் ஒரு நாள் ஊருக்கு கிளம்பினேன். இருபது வருடங்கள் கழித்து என் ஊரை மிதிப்பதில் எனக்கு ஒரே ஆனந்தம் ஆனாலும் பெரிய வீட்டிற்கு அப்பா இல்லாமல் சித்தப்பாவும் சித்தியும் இருக்க பெரிய வீட்டுக்கு போவதில் அவ்வளவு விருப்பமில்லை.மனைவியின் நச்சரிப்புக்காக சித்தப்பா வீட்டுக்கு தப்பு தப்பு எங்கள் அப்பாவின் வீட்டுக்குள் நுழைந்தேன். ஒரே மரியாதைதான், சித்தப்பாவின் வாரிசுகள் எங்களை சூழ்ந்து கொண்டு நலம் விசாரிப்புகள், சித்தப்பா உங்களை பார்க்கணும் பார்க்கணும் என்று துடிச்சுகிட்டிருக்காரு, என்று வருந்தி வருந்தி உள்ளே அழைத்தனர். உள்ளே என் சித்தப்பா உடல் மெலிந்து அந்த நார் கட்டிலில் படுத்திருப்பதை பார்த்தவுடன் என் வைராக்கியமெல்லாம் காணாமல் போய் விட்டது. சித்தப்பா என்று அவர் கையை பிடித்துக்கொண்டேன். அவரும் மெல்ல என் கையை பிடித்துகொண்டவர், சிறிது நேரம் மெளனமாய் இருந்து விட்டு எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். நல்லா இருக்கேன் சித்தப்பா என்றேன். உன்னை பார்க்கணும் எனத் துடிச்சுகிட்டிருந்தேன் என்று அவர் சொல்ல, எனக்கு என் பழைய காலங்கள் நினைவுக்கு வந்தது. சித்தப்பா என்னை பார்க்க முன் நாட்களை போலவே காத்துக்கிட்டு இருக்கிறார் என்று என் மனம் கரைந்து விட்டது.என்னால் கண்களில் வழியும் நீரை கட்டுப்படுத்த முடியவில்லை,இவர் கைகளால் உணவு உண்ட காட்சிகள் படம்போல் நினைவுக்கு வந்தது, சித்தப்பா மன்னிச்சிடுங்கோ என்று மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது.

மெல்ல தன் வாரிசுகளை பார்த்து அவர் கை அசைக்க அவர்களும் ஓடிச்சென்று ஒரு பேப்பர் கட்டை கொண்டு வந்து அவர் கையில் கொடுத்தனர். எனக்கு அது நிலப் பத்திரம் போல தெரிந்தது. சித்தப்பா தன் தப்பை உணர்ந்து விட்டார் போலிருக்கிறது, அது தான் பத்திரத்தை திருப்பி கொடுக்கிறார் என நினைத்து இதுக்கென்ன சித்தப்பா இப்ப அவசரம் என்று சம்பிரதாயமாக ஒரு வார்த்தை சொல்ல, இனிமேல் நான் இருப்பேனோ இல்லையோ என்று அவர் சொன்னவுடன் நான் மனம் பதை பதைத்து அப்படியெல்லாம் சொல்லாதீங்க சித்தப்பா எனச் சொல்லிவிட்டு, கொண்டு வந்த பத்திரத்தை பிரித்து பார்த்தேன். ‘இப்பொழுது இவர்கள் இருக்கும் வீட்டை’ சித்தப்பாவின் பெரிய மகனுக்கு இவர் எழுதி கொடுப்பதாகவும் இதற்கு எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று என்னையும் ஒரு சாட்சியாக கையெழுத்து போடுவதற்கு இடம் விட்டிருந்தது.
இப்பொழுது புரிந்தது சித்தப்பா ஏன் என்னை பார்க்க துடித்திருக்கிறார் என்று. கடைசியாக அப்பாவின் ஒரே சொத்தாக இருந்த இந்த வீட்டையும் தன் மகனுக்கு மாற்றவே தன்னைப் பார்க்க துடித்திருக்கிறார்.
பத்திரத்தை படித்துக் காண்பித்து மனைவியின் காதுகளில் படும்படி "சில உறவுகளின் குணம் மாறுவதே இல்லை “ என்று கூறியபடியே அவள் முகத்தை பார்த்தேன்.

எழுதியவர் : கே என் ராம் (9-Oct-22, 5:40 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 188

மேலே