புகைப்பாம்பு புதைக்கும் புறாக்கள்
மனித இனத்தை வஞ்சி வதைக்கும் புகைப்பழக்கமே!
உனது நஞ்சின் பாதையே மானிட நெஞ்சின் பகை.
உயிர்களை எரிக்கும் போலிநெறி கொண்ட புகையே!
உனது போதையால் புதைகிறதே பலரது வாழ்க்கை.
பாரபட்சம் பார்க்காமல் சோதித்து அடிமைப்படுத்தி
பல குடும்பங்களை வேதனையால் கரைக்கிறாயே!
சுவாச மண்டலத்தை இரக்கமின்றி வேட்டையாடி
பல உயிர்களை வெட்டி மண்ணிற்கு இரையாக்குகிறாயே!
புற்றுநோயால் பதறவைக்கும் அபாயகரமான வேடனே!
காசநோயை ஏற்படுத்தும் கடுங்கொடூரமான காற்றுக்காரனே!
இருதய நோய்களை வரவழைத்து இயல்பு வாழ்வை முடக்குபவனே!
உடலின் உயிரணுக்களை சேதப்படுத்தி துன்பக்கேடு தருபவனே!
எளிய மக்களை வாட்டி வதைத்து,
பட்டதாரி அறிவுகளையும் வீழ்த்தி மிதித்து,
பல குடும்பங்களின் நல்வாழ்வை வன்மையோடு கரைத்து,
இவ்வுலகையே நரகமாக்கும் உன்னை நாங்கள் விரைவில் வெல்வோமே!
உனது அடிமைப்படுத்துதலில் இருந்து அற்புதமாய் விடுதலையாகி
இவ்வுலகையே புகைப்பழக்கமற்ற புனித பூமியாய் நாங்கள் மாற்றுவோமே!
புகைப்பாம்பு கொன்று புதைக்கும் மனிதப்புறாக்களை
விழிப்புணர்வால் அறிவுறுத்தி மீட்டு அறவழியில் எல்லோரும் மலர்வோமே!