கல்லூரியில் அந்நாள்

அன்றோர் வியாழக்கிழமை, வழக்கம்போலின்றி வண்ணமயமாய், புன்னகையோடு பேராசிரிய பெருமக்கள், அத்தனை துறைகளின் நட்புநெஞ்சங்களும் அணியணியாய்,
 
அவனெங்கே இவளெங்கே என்றெல்லாம் தேடிப்போய் கைகுலுக்கி எனைப்பற்றி பக்கங்களில்  எழுதக்கேட்டு
விடைபெறப்போகும் நாள்,

நேற்றுவரை தொடர்ந்துவந்த உல்லாசப்பயணங்களெல்லாம் நாளைமுதல் மாறிப்போகுமென மனம்கொஞ்சம் கணம்கூட,

உயிர்நண்பன் தோள்பிடித்து வேறறோர் வட்டாரத்தில் நாளொரு சினிமா, தினம்சில தெருக்களென கொடிகட்டி
சுற்றித்திரிந்த வசந்தநாட்களை நினைத்து ரணம் உச்சம்தொட்ட கடைசி மணித்துளிகள்,

கல்லூரிப்பிரிவு நாள்!

காதல்சில, நட்புபல ,எனவெல்லாம் வசந்தநேரங்களை தொகுப்பாய்ச்சொல்லி குறும்புக்கார நண்பன் வணங்கி முடிக்க,
திடமென திரிந்தவன், கல்நெஞ்சக்காரன் என்றெல்லாம் கணக்குப்பார்க்காமல் கைக்குட்டைகளை கண்ணீர் நனைத்தது.

தினந்தோறும் சாய்ந்து ரசித்த பழைய கட்டிடச்சுவர்கள்தான், ஆனபோதும் பிறந்தவீட்டை விற்றுவிட்டு வெளியேறும் குடிமகன்போல நெஞ்சம் குமுறிக்கொண்டிருக்கும். மீண்டும் உரிமையாய் உள்நுழைய தவம்புரியனுமே,

நாலைந்து நெருங்கியோன் மட்டும் கைகோர்த்து, நாங்கள் தினம்  அமர்நது கதைத்த ஆய்வகவாசல்,வேப்பமரநிழல், வகுப்பின்வளாகம், இன்னும்பல என்று தேடித்தேடி சுற்றிவர அன்றைய நேரம்மட்டும் காற்றாய் காணாமல் போனது.

வடநாட்டுதம்பி,அடுத்தவூர் மச்சான், கேண்டீன் அண்ணன்,செக்யூரிட்டி தாத்தா என  எல்லோரையும் கூட்டில் ஆளாக்கி வளர்த்துவிட்டு, ஓரே நாளில் கூடுகலைத்து ஊர்திரும்ப பறக்கச்சொல்லி அனுப்பிவைத்தது எங்கள் கல்லூரித்தாய்...

இனிதினமும் முதலாம்வேளை வெறுப்பேற்ற பேராசிரியர் இல்லை,அடுத்தது வேலை,பணம் குடும்பமென மாறப்போகும் வாழ்வைநினைத்து,,, கல்லூரிவாசலில் சிலரை உதிர்த்து, நகர்ந்துகொண்டே நால்வரும் பேருந்து நிலையம் வந்துவிட,

மூன்றாமவன் பேருந்தில் அமர்நது,புறப்படப்போனநேரம் 
"வரேன் மச்சான்,நாளைக்கி பார்ப்ப்ப்"ன்னு விம்மிநிறுத்தி சொட்டுச்சொட்டாய்க்கண்ணீர் சிந்தினான்.

உடைந்தேபோனோம் முழுதுமாய்.அன்றைய நாளையேனும் பிடித்துநிறுத்த இயலாத எங்கள் கைகள் கண்ணீர்மழையை துடைக்க மறந்தன..
நானும் வேறோர் வழியின்றி விடைபெற,  பிறப்பில் வாங்கிவந்த வரமொன்று முடிந்துபோன நாளாய் என் கல்லூரிப்படிப்பின் இறுதிநாள்..!
                                                             
-அமரன்

எழுதியவர் : அமரன் (19-Oct-22, 12:11 pm)
சேர்த்தது : அமரன்
பார்வை : 602

மேலே