காடுமௌனம் - மீள்

காடுமௌனம்
=============

சில நேரங்களில்
அகக்குருட்டுச் சுவர்களில் விம்முகிறான்.
சில நேரங்களில்
இரத்த யாத்திரையில் நின்று
இடையாடுகிறான்.
சில நேரங்களில்
எலும்புகளுடைய சுரங்கங்களில்
ஒளியேற்றுகிறான்.
சில நேரங்களில்
காற்றுபோல் நெருங்கி
செவிகளுக்குள் முணுமுணுக்கிறான்
அவன் வெட்கம் கெட்டவன்
இன்னும் உயிர் நடமாடுகிறான்.
என் யாக்கையுள் வசிப்பதுதான் யார் ??
என்மிசை
இத்தனை வாசிக் கொண்டிருப்பதுதான் யார்??

ஆர்ந்து விரிந்த
கமன பாழ்ப்புறத்தில்
தாரகை நீண்டு நிற்கும்.
ஏகாந்தம் இருக்கும்.
வெம்பி ஒழுகும் இரவுடை அலைகள்
நிசப்தமாகி கழுவிப்போகும் கரையொன்று இருக்கும்.
இதய பாரங்களை ஏற்றி சேரும் ஓடம்
அங்கே இளைப்பாறும்.
நினைவுகளை தூரிகையாக்கி
விட்டுப்போனவன்
"எப்போது வருவான்", காத்திருக்கிறேன்.

காதல்
மெழுகுக்கூழ் உடைய பிரபஞ்சம்.
வீண் குழப்பங்களின் சூடு
அதை உருக்கிக் கொண்டிருக்கிறது.
நானும் அதற்குள்
உருகிக் கொண்டிருக்கிறேன்.
அதன்மீதே சாய்ந்திருக்கிறேன்.
பித்துப்பிடித்த காதலால்
பயந்திருக்கிறேன்.
அவன் எனக்கு
மிதமாக நேசிக்க
கற்றுக்கொடுக்கவில்லை
எல்லாம் முடிந்ததும்
அகன்று சென்றிருந்தான்.

சராசரி உலகம்
என்னைவிட்டு மறைந்துகொண்டிருக்கிறது.
அவன் முத்தங்களில்லாத
வெற்று சுவாசம்
என்னை உபத்திரவிக்கிறது.
நானறியாமல் போலும்
எனக்குள்ளிருந்த வெகுளித்தனங்களை
அவன் பார்வைகளும்
சிரிப்புகளும்
களவாடத் தெரிந்திருக்கின்றன.

என் ஸ்பரிசமில்லாமல்
அவன் வாழ்ந்துவிடக் கூடும்
வேறொரு விரல்களின்
ஸ்பரிசத்திலாவது
என்னை நினைவில் கொள்ளக் கூடும்.

என்னில் நான்
கேட்க நினைத்ததை
அவன்
சொல்லிக்கொண்டிருந்தான்.
என் நாட்களை சந்தோஷமாக்கினான்.
எதற்கும்
பிரதிபலன் இல்லை என்றானே?
அவன்மேல்
சாய்ந்திருந்தபோது
கேள்விகளின் குடியிருப்புகளாய்
நான் இருந்திருக்கவில்லை.
அவனுடைய பதில்களை
தத்துவங்களால்
கவிதைகளால்
சங்கீதத்தினால்
கட்டாயமாக்கி யிருந்தான்.

யோசிக்கிறேன்.
அவன் நினைவை
எப்போதாவது கடந்திருப்பேனா?.
உண்மையாகவே
என்னை பிடித்திருக்குமா?.
என் தேவைகள்
இனியும் அவனுக்கு வேண்டியிருக்குமா? .
தொலைந்து போனாலாவது
தேடி வருவானா ?
எனக்காக அழுவானா ? .
சந்தர்ப்ப சூழ்நிலைகளால்
எங்காவது
என்னை நினைத்துக்கொண்டாவது
வாழ்ந்திருப்பானா?.
அவன் வாழ்க்கை முறைக்கு
நான் ஏற்றவள்தானா?
அவன் பொறுத்தவரை
நான் அவனுடைய வாழ்க்கையா
இல்லை
அவன் வாழ்க்கைக்கான
தேர்வுகளுக்கு
நானும் ஒரு மாதிரியா ?
இப்படியெல்லாம் யோசிக்கிறேன்

அவன் இருந்தபோது
தலையாட்டி ஒப்புதல் தந்த
இயற்கையிடமிருந்து
இன்று காடுமௌனம் உணருகிறேன்

என் கேள்விகளின் சூறாவளியை
மனசுழற்சி
அழுத்தமாக
உள்ளிழுத்துக் கொண்டிருக்கிறது.
நா தழுதழுக்கிறது.
என் கதறல்களை
புறம் கேட்காதவாறு
அது என்னை ஆட்கொண்டிருக்கிறது.

நானும் அதற்குள்
மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராக (19-Oct-22, 5:12 pm)
பார்வை : 48

மேலே