குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து விடல் - பழமொழி நானூறு 200
நேரிசை வெண்பா
உடைப்பெருஞ் செல்வத்(து) உயர்ந்த பெருமை
அடக்கமில் உள்ளத்தன் ஆகி - நடக்கையின்
ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல், குரங்கின்கைக்
கொள்ளி கொடுத்து விடல். 200
- பழமொழி நானூறு
பொருளுரை:
உடைமையாகிய மிக்க செல்வத்தினை உடைய உயர்ந்த பெருமை தரத்தக்க முதன்மையை அடக்கமில்லாத உள்ளம் உடையனாகி ஒழுக்கத்தினும் தூய்மையுடையவன் அல்லாதவனிடத்து அரசன் கொடுத்தல் குரங்கினது கையில் கொள்ளியைக் கொடுத்து விடுதலை ஒக்கும்.
கருத்து:
அரசன் அற்பர்களுக்கு முதன்மையை அளிப்பது தீமையை அளிக்கும்.
விளக்கம்:
உடைமை கடைக்குறையாயிற்று. 'உடைப்பெருஞ் செல்வத்து உயர்ந்த பெருமை' என்றலின், இஃது அவ்வதிகாரத்தாயிற்று. முதன்மை சிறந்ததாயினும் அதனையுடையானது இயல்பு பற்றிக் கொள்ளிக்கு ஒப்பாயிற்று.
அடக்கம், தூய்மை முதலியன இன்மையின் அதனை உடையான் குரங்கிற் கொப்பாயினன். இதனால் தனக்கும் பிறர்க்கும் மிக்க தீங்கு விளையும் என்பதாம்.
'குரங்கின் கைக் கொள்ளி கொடுத்துவிடல்' என்பது பழமொழி.

