அம்மா அப்பா - கவிஞர் இராஇரவி நூல் மதிப்புரை கவிபாரதி மு வாசுகி
அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி !
நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி !
நூல் வெளியீடு : வானதி பதிப்பகம்,
23, தீனதயாளு தெரு,
தி.நகர், சென்னை – 11.
தொலைபேசி : 044-24342810
பக்கம் : 94 விலை : 9௦
நல்ல எண்ணத்தாலும் எழுத்தாலும் எல்லோரின் மனதிலும் இடம்பிடித்து வரும் இனிய கவிஞர் இரா.இரவி அவர்களின் இருபத்திஏழாவது நூலான ‘அம்மா அப்பா’ என்ற கவிதை நூல் பெருமைமிகு வானதி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. முன்பக்க அட்டையில் ஒரு குடும்பத்தின் பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் படங்கள் அழகாக அமைந்துள்ளது.
பின்பக்க அட்டையில் உலகமே அறிந்த கு.ஞானசம்பந்தன் ஐயா மற்றும் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் ஐயா அவர்களின் முகமும், அவர்களின் பெருமைமிகு வரிகளும் ‘முகவரி’யாய் இரா.இரவி அவர்களுக்கு மாறிவிட்டது சிறப்பிலும் சிறப்பு.
மாமனிதர் அப்துல்கலாம் அவர்களோடு கவிஞர் இரா.இரவி அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், கலாம் அவர்கள் தனது பொற்கரங்களால் எழுதிய கடிதம் போன்றவற்றை பலரும் அறிந்துகொள்ள இந்நூல் வகை செய்திருக்கிறது. இதனால் இரா.இரவி அவர்களுக்கு இன்னும் ‘நன்மதிப்பு’ உயரும் என்றே கூறலாம். இந்நூலில் உள்ள அனைத்து தலைப்பு கவிதைகளும் இன்றைய இளையதலைமுறைக்கு அவசியமானது தான்.
அன்று அநீதி
ஆணுக்கு கைச்சிலம்பு
பெண்ணுக்கு காலச் சிலம்பு!
என்ற வரிகள் பெண்ணுக்கு இவ்வுலகில் ஏற்படும் நிலையை எடுத்துரைக்கிறது. மேலும் பெண்களை மதிக்க வேண்டும் என்பதற்காகவே கவிஞர் இவ்வரிகளை எழுதியுள்ளார்.
ரத்தத்தில் ஊதிவிட்ட ஆணாதிக்கச் சிந்தனைகளை
ரத்து செய்துவிட்டு மதியுங்கள் பெண்களை ;
என பெண்ணினத்திற்காக வார்த்தைகளால் வழக்கறிஞரைப் போல் வாதாடுகிறார்.
மேலும் திருநங்கைகளைப் பற்றிய கவிதையில்
வழி இல்லாத வாழ்க்கை
வலி மிகுந்த வாழ்க்கை
திருநங்கைகள்!
என்ற இரண்டே வரிகளில் அவர்களின் மொத்த வாழ்க்கையையும் படம்பிடித்து விளக்கியிருப்பது சிறப்பு.
இந்நூலின் அனைத்து கவிதைகளும் சமுதாய அக்கறையை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கின்றன.
கவிஞர் இரா. இரவி அவர்கள் இன்னும் பல நூல்கள் படைக்கட்டும்! இனிவரும் தலைமுறையினரும் அனுபவிக்கட்டும்!