அஞ்செவிக்கு அழகு அறிவுரை கேட்டல் – அறநெறிச்சாரம் 198
நேரிசை வெண்பா
புண்ணாகப் போழ்ந்து புலால்பழிப்பத் தாம்வளர்ந்து
வண்ணப்பூண் பெய்வ செவியல்ல - நுண்ணூல்
அறவுரை கேட்டுணர்ந்(து) அஞ்ஞானம் நீக்கி
மறவுரை விட்ட செவி 198
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
புண்ணாகுமாறு துளைக்கப்பட்டு, புலால் நாற்றம் வீசுகிறதென்று பிறர் பழிக்குமாறு வளர்ந்து அழகிய அணிகள் அணியப் படுவன செவிகளல்ல;
நுண்ணிய அறநூற் பொருள்களைக் கேட்டாராய்ந்து அறியாமையைப் போக்கி பாவத்துக்குக் காரணமான சொற்களைக் கேளாது ஒழிவன செவிகளாகும்.
குறிப்பு:
நுண்மை நூல் - நுண்ணூல், போழ்தல் – பிளத்தல், குத்தல், அறம் x மறம்: எதிர்மொழிகள்.