கொலைவல் கூற்றம் கோள்பார்ப்ப வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு – நாலடியார் 331

இன்னிசை வெண்பா

கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே,
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு 331

- பேதைமை, நாலடியார்

பொருளுரை:

கொல்லுந் தொழிலில் வல்லமை உடையோனாகிய ஆற்றலிற் பெரிய கூற்றுவன் தம் உயிர் கொள்ளுதலை எதிர்நோக்கிக் கொண்டிருக்க, இவ்வுலகப் பற்றாகிய வலையிற் கிடந்து அதன்கட் களித்திருப்பாரது ஏழைமை இயல்பானது,

தன்னைக் கொல்லுங் கொலைஞர் தன்னை உலையில் இட்டு அடுப்பிலேற்றித் தீக்கொளுவ ஆமை நிலையறியாது அவ்வுலை நீரில் மூழ்கி விளையாடி மகிழ்ந்தாற் போன்றது.

கருத்து:

பேதைமை தனக்கு வரும் இடுக்கணை யறியாது களித்திருக்கும் இயல்புடையது.

விளக்கம்:

பெருங்கூற்றம் - எதிர்ப்பாரையற்ற பேராற்றல் வாய்ந்த கூற்றம்;

இவ்வுலக வலையென்றற்கு, ‘ஈண்டை வலை' யெனப்பட்டது; பற்றின் கட்டுக் கருதி வலை எனப்பட்டது.

மாண்பென்னும் நன்மொழியாற் கூறியது மிக்க இழிவை யுணர்த்திற்று;

இடுக்கண் அறியாமை - பேதைமையாயிற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Nov-22, 3:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே