உறவு என்பது பேதம் அல்ல வேதம்

கல்லூரியில் இருந்து புறப்பட்ட கார்த்திக் தனக்கான பேருந்தைப் பிடிப்பதற்காக வேகமாக நடந்தான். கைக் கடிகாரத்தைப் பார்த்தவன் பேருந்து வருவதற்கு ஐந்து நிமிடங்கள் இருந்ததால் அருகிலிருந்த சிற்றுண்டிச்சாலைக்குள் நுழைந்தான் "ஐயா ஒரு ரீ” என்றதும் மேசையில் கொண்டு வந்து வைத்த ஐயாவிடம் பணத்தைக் கொடுத்தான். சூடாக இருந்தாலும் அமரந்திருந்து பருகுவதற்கு நேரம் இருக்கவில்லை. கடிகாரத்தை பார்த்தபடி எழுந்து வீதியருகே நின்றான். பேருந்தும் வந்தது. ஜன்னலோரமாக அமர்ந்தவன் இரண்டு மணி நேரப் பயணத்தைக் கணக்கிட்டபடி, ஜன்னலூடாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். பேருந்தின் வேகத்திற்கேற்ப சுற்றமும் நகர்வது போலிருந்தது. காற்றின் வேகத்தில் குழம்பிய தலையை கைகளால் கோதினான், வீதியில் நின்ற ஓருவர் பேருந்தை மறித்ததும் சட்டென நின்ற பேருந்து மீண்டும் புறப்பட்டது.

ஏறியவர் இருப்பதற்கு இடமின்றி அங்கு இங்குமாக நடந்தார். கார்த்திக் சற்று ஓரமாக அமர்ந்து கையால் தன்னருகே இருக்கும்படி சைகை காட்டினான். அருகே வந்து அமர்ந்தவர் மெல்லிய புன்னகையால் நன்றியை வெளிப்படுத்த பதிலுக்கு தானும் புன்னகைத்தான். சற்று நேர அமைதியின் பின் நீங்க எந்த ஊர் என்று கார்த்திக்கை விசாரித்தான். பதிலளித்த கார்த்திக்கிடம் நான் வாமன் என்று கூறி இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தி விட்டு பேச்சைத் தொடர்ந்தார்கள். பேசிக் கொண்டு இருந்த வாமன் தொலைபேசி அலறுவதை உணர்ந்தான்.

ம்….. சரி…..மா, வாங்கிக் கொண்டு வாறன். தொலைபேசியை துண்டித்தான். திரும்பிக் கார்த்திக்கைப் பார்த்து அம்மா…., மாத்திரை வாங்கி வரட்டாம். என்றதும் ஓ அம்மாவிற்கு உடம்பு சரியில்லையா? என்று தயங்கியபடி கேட்ட கார்த்திக்கை நீர் நிறைந்த கண்களுடன் பாரத்தான். ஆம் கார்த்திக் அம்மாவால் ஒன்றும் செய்ய முடியாது, உடம்பு சரியில்லை, அப்போ….யார் அம்மாவைக் கவனிக்கிறது, என்ற கார்த்திக்கை பெருமூச்சுடன் பார்த்தான். அவனது சங்கடத்தை புரிந்த வாமன் இதில என்னங்க இருக்கு …. எல்லாம் இப்படித்தான் கஷ்டப்பட பிறந்தவன் கஷ்டப்பட்டுத் தான் வாழணும், என்றதும் ஏன் வாமன் நான் ஏதும்… சங்கடப்படுத்தினால்…. என்றபடி அவனது தோளைத் தடவினான்.

வாமன் சிறு பிள்ளையாக இருந்த காலத்தில் விதியின் விளையாட்டால் தந்தையை இழக்க வேண்டி ஏற்பட்டது. தந்தையுடன் வாழ்ந்தது சில காலங்கள் என்றாலும் அந்த நினைவுகள் பசுமையான பொற்காலமாகவே அவனுக்குள் பதிந்து கிடக்கிறது. ஒவ்வொரு கஷ்டத்திலும் தந்தையின் வெற்றிடம் அவனை தடுமாறச் செய்யும், சிறியதொரு தையல் கடையில் தையல் வேலை செய்தே வாமனை வளர்த்தாள் தாய் மல்லிகா. எத்தனை உறவுகள் இருந்தாலும் யாரையும் எதிர்பார்காமல் இரவு பகலாக உழைத்தாள். உடல்வேதனை ஒருபுறம், குடும்பச் சுமை ஒரு புறமென வாழ்க்கை புரண்டோடியது. இடையிடையே வரும் நெஞ்சுவலி வாமனை பயமுறுத்தும். சுயநினைவின்றி திடீரென சரிந்து விழுவாள். அம்மா…. அம்மா என்று பதறி துடித்து அயல்வீட்டாரை அழைத்து வருவான். அம்மாவிற்கு என்னாச்சு…. என்றபடி கண்விழிக்கும் வரை பக்கத்திலேயே இருப்பான். கண்விழித்ததும் அம்மா என்றபடி அணைத்து அழுவான். ரொம்பப் பயந்திட்டியா? அம்மாவிற்கு ஒன்றும் இல்லை. என்றதும் பிஞ்சுமனம் சற்று ஆறும். இவ்வாறே எல்லா கஷ்டங்களுடனும் வாமனை படிக்க வைத்து அவனது எதிர்காலத்திற்கு என்ன தேவையோ அத்தனையும் குறைவின்றி செய்தாள்.

உயர்நிலைக் கல்வியை முடித்ததும், நல்லதொரு கம்பனியில் வேலைக்கு இணைந்தான். போதுமான சம்பளம், அவனுக்கு கிடைக்காத எல்லாமே அவனால் பெற முடிந்தது. தாயையும் நன்றாகப் பார்த்தான்.

உனக்கென்ன மல்லிகா மகன் கைநிறைய சம்பாதிக்கிறான் ராணி மாதிரி வாழ்க்கை, இனி மேல் எங்களை எல்லாம் நீ கண்டு கொள்ள மாட்டாய் என்ற சுற்றத்தின் புறம்பேசல் அவளுக்குள் முள்ளாய் குத்தும். தன் பசி மறந்து, கண்விழித்து, தன்னை ஓடாய் தேய்த்து சிறுகச் சிறுக சேமித்த பணம் தான் தன் மகனை இன்று சமூகத்தில் ஒரு அந்தஸ்த்துடன் வாழ்வதற்கு சான்று என்பதும் அவர்கள் அறியாத ஒன்றல்ல.

இருந்தாலும் அவளுக்கு இருந்த நெஞ்சுவலி தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கும். வாங்க அம்மா நல்ல டாக்டராப் பார்த்துப் பரிசோதிப்பம். வாமனின் தொல்லை ஒருபுறம். ஏன் தம்பி இனிமேல் என்ன இருக்கு எனக்கு, நீயும் படித்து ஒரு நிலைக்கு வந்திட்டாய் , உனக்கு இனி ஏன் நானும் ஒரு பாரமாய் ……. குமுறிக் கொண்டு வரும் கண்ணீரை தனக்குள்ளே மறைத்துக் கொள்வாள். ஏனம்மா அப்படியெல்லாம் நினைக்கிறாய்…… ஏதோ ஒரு உணர்வு அவனை சஞ்சலப்படுத்தும்.

சில மாதங்களுக்கு முன்பு, வழக்கம் போல ஏற்பட்ட நெஞ்சு வலி கொஞ்சம் அதிகமாகவும், அவளால் தாங்க முடியாமலும் இருந்தது. கம்பனிக்கு விடுமுறை சொல்லி விட்டு அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றான் வாமன். ஆரம்ப பரிசோதனைகள் தொடக்கம் விரைவாக எல்லாம் நடைபெறுகிறது. எல்லா வசதிகளும் உள்ள தனி அறையில் மல்லிகா அனுமதிக்கப்பட்டாள். வாமனும் எப்படியாவது அம்மாவைக் காப்பாற்ற வேண்டும் என்று எல்லா சிகிச்சைகளுக்கும் சம்மதித்தான்.

பரிசோதனைகள் எண்ணுக்கணக்கற்று ஒருபுறமாக, வாமனும் வங்கியிலிருந்து பணத்தை எடுத்து கட்டிக் கொண்டிருந்தான். டாக்டர் வெளியே வருகிறார், வாமனிடம் மல்லிகாவின் முன்னைய உடல் நிலைகள்,நோய்களைப் பற்றி விசாரிக்கவும், அம்மாவுக்கு ஒன்றும் இல்லைத் தானே…. டாக்டர், பதட்டத்தோடு வினவியவனிடம் றிப்போட் வரட்டும் பார்க்கலாம், நீங்கள் போய் அம்மாவைப் பாருங்கள். கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவன் அப்படியே நின்று விட்டான். தலையை அசைத்து அருகே வரும்படி அழைத்து கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.

இரண்டு கண்களிலிருந்தும் கண்ணீர் வடிந்து கொண்டு இருந்தது. ஏனம்மா…. என்றவனின் உதடுகளில் வார்த்தைகளும் தடுமாறின. இரண்டு மனங்களும் தடுமாறித் தவித்தது. தம்பி டாக்டர் என்ன சொன்னாலும் பயப்படாதே, பார்த்துக்கலாம்… நான் வளர்த்த பையன் நீ…. உடல் சோர்வடைந்து போனதும் கைகளைப் பற்றியபடி கண்ணயர்ந்தாள்.

மீண்டும் டாக்டர் உள்ளே வருகிறார், தாதியார் ஒருவர் ஒரு தாளை நீட்டுகிறார் , சாதாரணமான சில பரிசோதனைகளை செய்து விட்டு, வாமனை நிமிர்ந்து பார்த்தார். என்ன சொல்லப்போகிறாரோ என்று உள்மனம் பதறியது. கடவுளை வேண்டினான், மல்லிகா மயக்க நிலை போல் கண்களை மூடியபடி இருந்தாள்.

மருத்துவப் பரிசோதனை அறிக்கையை தாதியிடம் கொடுத்து விட்டு , அம்மாவிற்கு மார்பகப் புற்று நோய், ரொம்ப ஆபத்தான கட்டம், சத்திர சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டும். இருந்தாலும்…… என எதையோ சொல்லத்தயங்கியவராய் வாமனைப் பார்த்தார்.

அறுவைச் சிகிச்சைக்கான ஆயத்தங்களை ஏற்பாடு செய்து விட்டு காத்திருந்தான். தன்னை வருத்தி, உழைத்து, வளர்த்தவளின் உயிர் பிழைக்க தவியாய் தவித்தான். ஒவ்வொரு மூச்சும் வேகமெடுப்பது போலிருந்தது.

ஏழையாக உழைத்து, தன் பிள்ளைக்காய் ஓடாய்த் தேய்ந்தவள். தன் பிள்ளை பணக்காரன் என்பதை பார்த்து மகிழ்ந்தாள். கிடைக்காத சந்தோசங்களுக்காய் அவள் ஒரு போதும் ஏங்கியதில்லை. வாமன் வாசலிலே பல மணிநேரம் காத்திருந்தான்.

கதவைத் திறந்தபடி வந்த டாக்டர், முகத்தை கைக்குட்டையால் ஒற்றியபடி வாமனை அழைத்தார். படபடப்புடன் அருகே சென்றான்.

இரண்டு நாளில் வீட்டிற்கு கூட்டிப்போகலாம், மருந்து, மாத்திரையோட தான் கவனிக்க வேண்டும். என்று வாமனை தோளைத் தட்டி திடப்படுத்தினார்.

மருந்து, மாத்திரை, பராமரிப்புச் செலவு என்று பணம் நாளுக்கு நாள் பறந்து கொண்டிருந்தது. வாமனும் ஓய்வின்றி உழைத்தான். ஆசை ஆசையாக வாங்கிய பொருள் எல்லாம் விற்க வேண்டி ஏற்பட்டது. “ஏன்டா எங்கேயாவது பராமரிப்பு நிலையங்களில் கொண்டு போய் விட்டு விடன். இப்படி எல்லாம் ஏன் கஷ்டப்படுகிறாய்” அநேகமானவர்களின் கருத்து அவ்வாறே இருந்தது.

“தம்பி என்னால நீயும் கஷ்டப்படுகிறாய், கடவுளும் என்னைக் கூப்பிடுகிறார் இல்லை……”அம்மாவின் மன உளைச்சல் வார்த்தைகளாய் சிதறும். நொருங்கிய கண்ணாடியாய் பிளக்கும் மனப்பாரம். தன்னை சுமந்தவளின் பாரம் மறந்து பாசத்தைக் காட்டும் தாயானான்.

ரொம்ப யோசிக்காதீங்க வாமன் எல்லாம் ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையில் தான் எங்களுடைய வாழ்க்கையை நாங்கள் வாழ வேண்டும். அது சரி கார்த்திக்….. ஆனால் இன்றைய காலத்தில் எங்களுடைய சமூகம் உறவு என்ற ஒன்றை மறந்து போகிறார்கள். பணம் இருந்தால் தான் சொந்தங்கள் கூட தேடுவார்கள். எவ்வளவு சுயநலம் பார்த்தீர்களா? ஆமாம் வாமன் உறவும், பணமும் இருந்தால் தானே வாழ்க்கையில பிரச்சனை எங்களைப் போன்றவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. வாமனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் கார்த்திக்….. உங்களைப் பார்த்தால் அப்படி ஒன்றும்….. என்றவனின் தயக்கத்தை புரிந்தவன் உங்களுக்கு யாரும் இல்லையா……? என்றதும் கண்ணீரைத் தடுத்தவனாய் தலையை ஆட்டினான். இருவரும் பேசிக் கொண்டிருந்தனர், மீண்டும் வாமனின் தொலைபேசி அலறியது, தொலைபேசியை எடுத்து சொல்லுங்கம்மா என்றவன், பேரிரைச்சலுடன் எதிரே வந்த வாகனம் மோதி பேருந்து புரண்டதும் தொலைபேசியைக் கை விட்டு விட்டான்.

காயப்பட்டவர்கள், இறந்தவர்கள் எல்லாரும் வைத்தியசாலைக்கு ஏற்றப்பட்டார்கள் கார்த்திக் வாமனைத் தேடிக் கொண்டிருந்தான். யாரோ இருவர் வாமனைத் தூக்கிச் செல்வதை அவதானித்தவன் வாமனுக்கு ஏதோ நடந்து விட்டதை உணர்ந்தான். எங்கோ இருந்து தொலைபேசியின் அலறல் சத்தம் கேட்டது, தரையைப் பார்த்து தேடினான், வாமனின் தொலைபேசி…. என்றபடி எடுத்துப் பார்த்தான் அம்மா அழைப்பில் இருந்தாள். எடுத்துக் காதில் வைத்தான், தம்பி என்னாச்சு….. பதறிய குரலைக் கேட்டதும் அமைதியாக ஏதும் பேசாமல் நின்றான். “கவனமாக பார்த்து வா ராசா….. “ தளதளதளத்த குரல் கார்த்திக் மனதை நொருக்கியது. “சரியம்மா…..” என்று அழைப்பைத் துண்டித்தான்.

வேகமாக எல்லா இடமும் வாமனின் தோள் பையை தேடினான். எங்கோ ஒரு இருக்கையில் அவனுடைய தோள்ப்பை தொங்கிக் கொண்டிருந்தது. வீட்டு முகவரியை தேடிப் பிடித்தான். விரைந்தோடி வீட்டிற்குள் நுழைந்தான். “அம்மா…. அம்மா…. “ சத்தமாக கூப்பிட்டதும், “யார் தம்பி…. “ என்ற குரல் கேட்ட திசை நோக்கி நடந்தான், வாமனின் அம்மா படுக்கையில் சுருண்டு கிடந்தாள். ஒட்டி, ஒடுங்கி, பலமின்றி பார்வை மங்கலாக கார்த்திக்கை உற்றுப் பார்த்தாள். “நீங்க யார்… தம்பி” என்றவளிடம் எப்படி வாமனைப் பற்றி சொல்வது என்று தெரியாமல் தவித்தான். அம்மாவின் கைகளைப் பிடித்து “வாமன்… வா… மன்…. விபத்தில….”என்றதும் கதறித் துடித்தாள். “என்பர் பிள்ளை….”என்ர பிள்ளை என்று பெற்ற வயிறு துடித்து அழுதாள்.

எத்தனை ஆறுதல் சொல்லியும் ஆறாதவளை மெதுவாக தன்மடியில் படிக்க வைத்தான். தலையை கைகளால் தடவினாள், “என்ர பிள்ளை” என்று அவன் முகத்தை தடவியவள் அவன் கைகளையும் இறுகப் பற்றினாள். வாமனின் இறுதிச் சடங்குகளை சுற்றத்தாரோடு சேர்ந்து செய்து முடித்தான். மல்லிகாவை தனியாக விட்டுப் போக கார்த்திக்கால் முடியவில்லை. தன் தாய்போல் வாமனின் தாயாரைக் கவனித்தான். கார்த்திக் மல்லிகாவின் பிள்ளை ஆனான். தாய்பாசம் அறியாத கார்த்திக் வாமனின் தாயரை வரமாகப் பெற்றதைப் போல் உணர்ந்தான்.

சில நாட்களின் பின் சாப்பாட்டை ஊட்டி விட்டு மாத்திரையை எடுத்துக் கொடுத்த கார்திக்கிடம் “தம்பி நீயும் இத்தனை நாளாக என்னுடனே இருக்கிறாய், வீட்டில் தேடமாட்டினமே” என்றதும் “இல்லையம்மா பிரச்சனை இல்லை, கம்பனிக்கு லீவு போட்டு இருக்கிறேன், இரண்டு நாளில் வேலைக்குப் போக வேண்டும்,” என்றவன் தனது விடுதி பொறுப்பானவருக்கு விபரத்தை தெரியப்படுத்தி வாமனின் அம்மாவுடன் தங்குவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டான்.

கார்த்திக் வாமனின் அம்மாவைப் பார்த்துக் கொண்டு தனது வேலையிலும் கவனம் செலுத்தினான். வாமனின் நினைவு வரும்போதெல்லாம் கார்த்திக்கை அழைத்து அவனைப் பற்றிச் சொல்லி அழுவாள், “அழாதீங்க அம்மா நானிருக்கிறேன், என்னையும் உங்கள் மகனாக நினையுங்கள்” என்றதும் அவனுள் இருந்த தாய்ப்பாசத்தின் தவிப்பு கண்ணீராய் கரையும். தனது சட்டைப் பையினுள் இருந்த அம்மாவின் புகைப் படத்தை எடுத்து காட்டி, “இங்கே பாருங்க அம்மா, இது தான் என்னுடைய அம்மா, சின்ன வயதிலேயே சுகயீனத்தால் இறந்து விட்டா, அப்பா வேறு திருமணம் செய்து விட்டார். என்னுடைய மாமா என்னை விடுதியில் தங்க வைத்து படிக்க வைத்தார். இப்போ நான் வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டேன். கை நிறைய காசு இருக்கு ஆனால் அம்மா…. “என்று கலங்கியவனை தனது நடுங்கிய கைகளால் அணைத்துக் கொண்டாள். “பார்த்தியா தம்பி எங்கேயோ இருந்த உன்னை கடவுள் எனக்குத் துணையாக கூட்டி வந்து விட்டிருக்கிறார். என்ர பிள்ளைக்கு நான் என்றால் உயிர், எனக்கும் அப்படித்தான், பாவம் என்ர பிள்ளை….. இப்படி நடக்கும் என்று…”குமுறி அழுதாள்.

ஆறுதல்படுத்திய கார்த்திக் அவளுக்கான உணவையும், மாத்திரையையும் எடுத்து வந்து கொடுத்தான். அவள் தூங்கும் வரை அருகிலேயே இருந்தான். நாட்கள் ஓடி மூன்று மாதங்களாகியது வழமைபோல் உணவை ஊட்டி மருந்தைக் கொடுத்து விட்டு அருகிலேயே இருந்தவன் அம்மா மூச்சு எடுக்க முடியாமல் சிரமப்படுவதை அவதானித்தான், நண்பர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றான். கார்த்திக் மடியில் தலை சாய்த்துக் கிடந்தவள் அவன் கைகளைப் பற்றிப்பிடித்தபடி கண்களை மூடினாள். அம்மா…. அம்மா…. கன்னத்தில் தட்டி எழுப்பினான் அசைவின்றிக் கிடந்தாள் மல்லிகா.

தாய்ப்பாசமே அறியாத கார்த்திக் வாமனை ஒரு சகோதரனாகவும், அவனது தாயை தனது தாயாகவும் பெற்றுக் கொண்டதை வரமாக எண்ணி மகிழந்தான். பெற்றால் தான் பிள்ளை, கூடப் பிறந்தால் மட்டும் தான் உடன்பிறப்பு என்று பேதம் பார்க்கும் சமூகத்தில் உறவு என்பது வேதம் என்பதில் மாறுபட்டவனாகவே வாழ்வான்……

எழுதியவர் : றொஸ்னி அபி (23-Nov-22, 12:05 pm)
சேர்த்தது : Roshni Abi
பார்வை : 258

மேலே