அன்பென்னும் ஆழ்கடல்……

ஏதேதோ எழுதிக் கிறுக்கிய என் பேனா
எதை எழுதுவது என்று பக்கங்களைப் புரட்டியது,
அன்புடன் அப்பா என்று ஆரம்பித்த என் விரல்கள்
தடுமாறி நிற்கும் கணம்……
என் அன்பின் ஆதாரமே….
என் இதயத்தின் உயிர் துடிப்பே….
என் கண் கண்ட முதல் தெய்வமே…
அப்பா…..
கை பிடித்து ஏடெழுத கற்றுத் தந்தாய்
அறிவு என்னும் பெருங் கடலை
அன்போடு புரிய வைத்தாய்…
பிஞ்சுப் பாதங்கள் மண்படாமல் தோள் சுமந்தாய்…
காலெடுத்து நான் நடக்க கை பற்றி துணை நின்றாய்
ஒழுக்கம் என்றும் தவறாமல் கண் காத்த தெய்வமானாய்
ஒப்புரவும், ஒற்றுமையும் பலமென்றே தினமுரைத்தாய்
சிந்தாமல் சிதறாமல் பகிர்தலில் முன் நின்றாய்
சின்னச் சின்ன ஆசையெல்லாம்
சிக்கனமாய் செய்திடுவாய்
உன் ஆசை எல்லாமே எந்தனுக்காய் ஒறுத்தாயோ….
கல்வி, ஒழுக்கம், இறைபற்று
அன்பு, பணிவு, தன்னடக்கம்
உயர்வின் ஏணிப்படி என்பாய்…
என் வாழ்க்கை என்னும் பாடத்தின்
முதல் ஆசானே….
வாழந்த காலம் மறக்குமா நெஞ்சம்..
கூடு விட்டுப் பறந்து விட்டாய்…
வெற்றுடலாய் நிற்கின்றேன்
விடியாத இரவுகளாய் புலர்கிறது காலை…
காலனவன் கணக்கில் ஏது தவறு நான் சொல்ல
விதி என்று எண்ண மறுக்கிறது மனமிங்கு…
சிந்தும் நீர்த் துளிகள்
நினைவலையாய் சொரிகிறதே…
அன்பென்னும் ஆழ் கடலே
என் அப்பா …..எங்கே ….?

எழுதியவர் : றொஸ்னி அபி (25-Nov-22, 10:59 am)
பார்வை : 606

மேலே