அருக்காணியின் ஆடு

அருக்காணியின் ஆடு

அருக்காணி மூக்கை உறிஞ்சினாள், பக்கத்தில் உட்கார்ந்திருந்த செல்லம்ம என்னாடி அழுகறயா?
க்கும்..என்னாத்துக்கு அழுகோணும்?
ஏண்டி உங்க ஆத்தா அப்படி வஞ்சிட்டு போகுது, எங்க ஆத்தாவா இம்மா நேரத்துக்கு குச்சி எடுத்து வெளுத்திருக்கும்.
சமயம் கிடைத்தால் போதும் இவ இவளோட ஆத்தா புராணத்தை பாட ஆரம்பிச்சிடுவா அருக்காணி நினைத்துக்கொண்டாலும், வெளியே சொல்லவில்லை, அவங்கவங்களுக்கு அவங்க ஆத்தா பெரிசுதான், சொல்லி சிரித்தாள்.
அதுவும் சரிதான்..என்னாத்துக்கு உங்க ஆத்தா அப்படி வையோணும்?
கடுவனை வாய்க்கா தோட்டத்துல மேய வுட்டுட்டேன், அதான் கருப்பன் வந்து ஆத்தாளை மிரட்டிட்டு போயிருக்கான், அவ ஆத்திரம் தாங்காம என்னாண்டை வந்து வஞ்சிட்டு போறா.
கருப்பன் வாய்க்கா தோட்டக்காரனுக்கு வலது கையாமாடி, பார்த்து நடந்துக்கோ, உன் கடுவனை நாளைக்கு புடிச்சு கட்டி வச்சுட்டானா அம்புட்டுதான்,
இவ கருப்பனுக்கு சாதகமா பேசறாளா, நமக்கு சாதகமா பேசறாளா? திகைத்த அருக்காணி, இப்ப என்னா நடந்துச்சுன்னு கருப்பனை தூக்கி வச்சு பேசறே, கடுவன் எப்பவும் அந்த பக்கம் போக மாட்டான், நேத்து என்னமோ அவன் தோட்டத்துக்குள்ள போன மாதிரி குதிக்கறான், அது வேலிகாத்தான் செடியத்தான் மேஞ்சுகிட்டு நின்னது. இதுக்கு அந்த குதி குதிச்சு ஆத்தா கிட்ட சண்டைக்கு போயிருக்கான். அருக்காணியின் குரலில் ஆத்திரம் இருந்தது.
கடுவன் இப்பொழுதும் அந்த கள்ளிக்காட்டில், தன் சோக்காளிகளுடன் மேய்ந்து கொண்டுதான் இருந்தது. அவ்வப்போது மே..ஹே.. குரல் எழுப்பி அருக்காணியிடம் தான் இங்குதான் இருக்கிறேன் என்று அறிவித்தபடி இருந்தது. அடுத்து தொட்டாற்போல் செல்லம்மாளின் ஆடுகள் கூட மேய்ந்தபடிதான் இருந்தது.
நேற்று செல்லம்மாளும் வரவில்லை, அருக்காணி எவ்வளவு நேரம்தான் அந்த முள்ளுக்காட்டு நிழலுக்குள் ஒற்றையாய் உட்கார்ந்திருப்பாள். ஓணான் ஒன்று இவளை பார்த்து முதுகை துக்கி தூக்கி காண்பிக்க இவளுக்கு வந்ததே ஒரு கோபம், குனிந்து ஒரு கல்லை எடுத்து அதன் தலையை பார்த்து வீசினாள்.
கல் ஓணானை தாண்டி கடுவன் மேய்ந்து கொண்டிருந்ததின் மீது விழ கடுவன் சட்டென தலையை தூக்கி பார்த்தது. இவள் மட்டுமே கண்ணுக்கு தெரிய தள்ளிப்போய் மேய சொல்கிறாள் என நினைத்ததோ என்னவோ சரிவில் இறங்கி வறண்டு கிடந்த வாய்க்காலை ஒட்டி இருந்த வேலிக்குள் புகுந்து கொண்டது.
இதை எதுவும் கவனிக்காத அருக்காணி ஓணானை சுற்றி சுற்றி வந்து கல் வீசி அடிப்பதில் ஈடுபட்டிருந்தாள்.
வயிற்று கடுப்பில் வாய்க்கா பள்ளத்தில் ஒதுங்கியிருந்த வாய்க்கா தோட்டத்து சுப்பையன் எழும்போது, அதே நேரத்தில் கடுவனும் புதரை விட்டு இந்தப் புறம் வர சுப்பையனுக்கு வந்த கோபம்… கடுவனை அங்கேயே பிடித்து கட்டியிருப்பான், நாளைக்கு கடலை தோட்டத்தில் களை எடுக்க அருக்காணி அம்மா செவந்தியை வர சொல்லியிருந்தான். அவ பேச்சுக்கு வேலையாட்கள் பத்து பேராவது அவளோடு வருவார்கள்.
தோட்ட வேலைக்கு ஆள் கிடைக்காத சிரமத்தில் அவளிடம் எதுக்கு மோதணும்? இருந்தாலும், நாளைக்கு வேலைக்கு வரும்போது அவ கிட்ட சொல்லி வைக்கணும், அதுக்கு முன்னால கருப்பனை அனுப்பி சத்தம் போட்டு விட்டு வர சொல்லியிருந்தான்.
அருக்காணியின் அம்மா செவந்தி ரோஷக்காரி, புருஷன் தொடுப்பு வேற பக்கம் போயிடுச்சு என்று தெரிந்த பின்னால் “போடா சர்த்தான்” இவளின் அப்பனின் குடிசைக்கு அருக்காணியையும் கூட்டி வந்து விட்டாள். மனைவி இறந்த பின்னால் தனியாய் ஆக்கி தின்னுகிட்டிருந்த இவள் அப்பன் இவள் வந்தவுடன் நிம்மதியாய் குடிசை முன்னால் கயித்து கட்டிலை போட்டு உட்கார்ந்து விட்டான்.
அருக்காணியை ‘ஸ்கூலில்’ இருந்து நிறுத்திய செவந்தி பக்கத்து குடிசை செல்லம்மாவுடன் ஆட்டை மேய்க்க காட்டுக்கு அனுப்பி விட்டாள். கடுவனோடு சேர்ந்து ஐந்து ஆடுகள், அதில் இரண்டு சினை, சூதானமா பார்த்து மேய விட்டு கூட்டியா, பல முறை சொல்லித்தான் அனுப்பினாள்.
அருக்காணி படித்திருந்தாள் ஏழாப்பு போயிருக்கணும், அதை விட இது சுலபமாக தெரிந்தது. இந்த கருவேல காட்டுக்குள் இவளே வாத்திச்சியாக, ஒரு குச்சியை எடுத்து கடுவன் கூட்டத்துக்கும் செல்லம்மாவின் ஆட்டு கூட்டத்துக்கும் பாடம் நடத்துவாள். செல்லம்மாளுக்கு ஆச்சர்யமாய் இருக்கும். அவள் நாலு வயதில் இருந்தே ஆடுதான் மேய்த்து கொண்டிருக்கிறாள். ஆனால் தனியாக சென்றதில்லை. அருக்காணி இருந்த தைரியத்தில் அவளுக்கும் நாலைந்து ஆடுகளை பிரித்து இவளுடன் மேய அனுப்பினாள், அவள் அம்மா..
ஏழாப்பு வரைக்கும் படித்திருந்த அருக்காணிக்கு செல்லம்மா போன்ற தற்குறிகளுடன் பழகுவது ஆரம்பத்தில் சிரமமாகத்தான் இருந்தது. போகப்போக அவள் இவளை பெரிய படிப்பாளியாக நினைத்து கொண்டதால் அவளுடன் ஒத்து போய் விட்டாள். இப்படியே ஆறு மாதம் ஓடித்தான் போயிருந்தது.
கருப்பன் வந்து செவந்தியிடம் என்ன சொல்லி மிரட்டினான் என்று தெரியாது, இவள் நேராக, காலை பத்து மணி வாக்கில் வந்து அருக்காணியை திட்டு திட்டு என்று திட்டி விட்டே அங்கிருந்து சென்றாள். அதுவும் சுப்பையன் அந்த பக்கம் நிற்கிறான் என்பதை அறிந்தே அவள் அருக்காணியை அந்த பேச்சு பேசிவிட்டு சென்றாள்.
அருக்காணிக்கு ஆத்தா உண்மை தெரியாமல் தன்னை எப்படி பேசலாம் என்னும் கோபம்தான் இருந்தது. அது வாய்க்கா தோட்டத்து செடிகளை பதம் பார்த்திருந்தா லாவது அவள் திட்டுவதில் ஒரு நியாயம் இருந்திருக்கும், எதுவுமே இல்லாமல் வேலியோரத்து செடிகளை மேய்ந்ததுக்கு இப்படி பேசினால்.
மாலை மங்கும்போதே செல்லம்மா ‘அடியே அருக்காணி’ வா போலாம், அந்த புதர் நிழலிருந்து எழுந்தவள் ஆடுகளுக்கு குரல் கொடுத்தாள். அருக்காணியும் விருப்பமில்லாமல் எழுந்து கடுவனையும் மற்ற ஆடுகளையும் அழைத்தாள்;.
ஹை..வரிசயா போ..ம்..ம்..விரட்டியபடி இவர்கள் இருவரும் நடந்தபடி இருக்க ஏதேச்சையாய் அவள் பார்வை சுப்பையன் தோட்டத்தில் விழுந்தது. அங்கு இவனுக்கு அடுத்த மூணாவது தோட்டத்து முத்தண்ணனின் மாடு சுப்பையன் தோட்டத்து கடலை செடிகளை மேய்ந்து கொண்டிருந்தது.
அவள் மனசுக்குள் அப்படி ஒரு சந்தோசம் பொங்கியது, “என்ற கடுவன்” உன் வேலியில மேஞ்சதுக்கே அத்தனை கூப்பாடு போட்டியே, இப்ப பாரு “உன்ற கடலை செடி” மாட்டு வாயில போகுது பாரு..
இப்படி சந்தோசமாய் நினைத்தபடி அவளின் கால்கள் நடக்க முயற்சித்தாலும், மனம் ஏதோ சொல்ல, சட்டென திரும்பி சுப்பையன் தோட்டத்தை நோக்கி ஓடினாள். ஹோ..ஹோ..ஹை..ஹோ ஹை..
அவள் கூப்பாடு கேட்டு ஓடி வந்த சுப்பையன் முத்தண்ணனின் மாட்டை விரட்டினான், ஆனால் முத்தண்ணனிடம் சண்டை போட மனமின்றி மாட்டை விரட்டி விட்டு வீட்டுக்குள் புகுந்து கொண்டான்.
முத்தண்ணன், பங்காளி, இவனை விட வலியவன், அவனிடம் சண்டை போட முடியுமா?
அருக்காணியின் அம்மா செவந்தி ஏழை, குடிசையில் இருப்பவள். வேலியோரம் மேய்ந்தாலே சண்டையிடலாம்.
அருக்காணி அதை பற்றிய எண்ணமெல்லாம் இல்லாமல் திரும்ப வந்து தன் கடுவனையும்,மற்ற ஆடுகளையும் செல்லமாய் விரட்டியபடி சென்று கொண்டிருந்தாள்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (26-Nov-22, 12:54 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 117

மேலே