ஏன் ஆபீசுக்கு லேட்

முதலாளி: ஏன் ஆபீசுக்கு லேட்?
உயர் அதிகாரி: குட் மார்னிங், சார். அடுத்தவாரம் நாம் நடத்தும் ஒரு செமினாருக்கு சில விஷயங்களை, காலையில் கூகுளில் பார்த்தவுடன் கையேடு டவுன்லோட் செய்து கொண்டுவர கால் மணிநேரம் தாமதம் ஆகிவிட்டது.

உயர் அதிகாரி: ஏன் ஆபீசுக்கு லேட்?
கீழ்நிலை அதிகாரி: நம்மோட முக்கியமான கஸ்டமர் ஒருத்தர், அவர் ஆபீசுக்குப் போக லிப்ட் கேட்டார். லிப்ட் கொடுத்துட்டு வர அரை மணி லேட் ஆயிடிச்சு.

கீழ்நிலை அதிகாரி: ஏன் ஆபீசுக்கு லேட்?
மேற்பார்வையாளர்: சரியாக நான் கிளம்பும் நேரத்தில்தான் வீட்டில LPG காஸ் தீர்ந்துவிட்டது. தீர்ந்து போன சிலிண்டரை கழட்டி எடுத்துவிட்டு, வேறு அறையில் இருந்து இன்னொரு சிலிண்டரை எடுத்துக்கொண்டு போய் சமயலறையில் வைத்து, பிக்ஸ் பண்ணி, காஸ் ஸ்டவ்வை ஏற்றி லீக்கேஜ் இருக்கான்னு செக் பண்ணிட்டு ஆபீஸ் புறப்பட்டதால் முக்கால் மணி நேரம் லேட் ஆகிவிட்டது.

மேற்பார்வையாளர்:ஏன் ஆபீசுக்கு லேட்?
உதவியாளர்: நான் வெளியே வந்து ஸ்கூட்டியை கிளப்பும்போதுதான் சரியாக அந்த நேரம் பார்த்து, LPG ரீபில் கொண்டுவந்தான். மனைவிக்கு கொஞ்சம் ஜலதோஷம் என்பதால், நான் அவனுடன் சென்று, சிலிண்டரை வாங்கி வைத்துவிட்டு, பணம் செட்டில் பண்ணிட்டு வர ஒரு மணி லேட் ஆகிவிட்டது.

உதவியாளர்: ஏன் ஆபீசுக்கு லேட்?
குமாஸ்தா: அது ஒண்ணும் இல்லை சார். நான் வீட்டிலிருந்து வெளியே வரும்போதுதான் பக்கத்துக்கு வீட்டம்மா "சார், LPG காஸ் நேரம்பார்த்து தீர்ந்துவிட்டது. கொஞ்சம் சிலிண்டர் கொடுத்தீங்கன்னா, இப்போவே புது
ரீபிலுக்கு புக் பண்ணிட்டு வந்தவுடன் உங்களுக்கு அதை கொடுத்துடறேன். எங்க வீட்டுக்காரருக்கு இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமா ஆபீஸ் போகணும். பக்கத்துவீட்டம்மா நல்லமாதிரி, நல்லாவும் இருப்பாங்க. சரின்னுட்டு வீட்டுக்குப்போய் காஸ் சிலிண்டரை இழுத்துக்கொண்டு வெளியே வந்து அவங்க வீட்டிலே பிஸ் பண்ணிட்டு, காஸ் அடுப்பு ஏத்தி செக் பண்ணிட்டு கிளம்பும்போது அவங்க ஆசையாக "ஒரு வாய் காபி சாப்பிட்டுப்போங்க" என்று விடுத்த அன்பு வேண்டுகோளைத் தட்டமுடியாமால் , இரண்டு வாய் சூடான காபி குடித்துவிட்டு, வேகவேகமாக வண்டியில் புறப்பட்டு வருவதற்குள் ஒண்ணரை மணி நேரம் லேட் ஆகி விட்டது.

குமாஸ்தா: ஏன் ஆபீசுக்கு லேட்?
அட்டெண்டன்ட்: சார் நான் இப்போ ஆபிசுக்கு வந்ததே பெரிய விஷயம். வீட்டிலிருந்து கிளம்பசொல்ல பக்கத்துக்கு வீட்டு பக்கிரியை யாரோ பிடித்து அடித்துக்கொண்டிருந்தாங்க. ஒரு மனுசனை இன்னொரு மனிசன் அடிக்கிறத உங்களால் பார்த்துக்குன்னு சும்மா இருக்கமுடியமா சார். உடம்புல ரத்தம் சூடாக ஜிவ்வுன்னு ஏறாதா? நானும் அதுமாதிரிதான்.
சர்ருன்னு ஓடிப்போய் பக்கிரி மேல் கைவைத்த போக்கிரியைப் பார்த்து " ஏம்பா, பார்த்தா நல்ல மனுசன் மாதிரி இருக்கியே, இவரைப் போய் காலங்கார்த்தால பட்டு பட்டுன்னு தட்டுறியே, விராட் கோலி பாட்டால் விளாசுவது போல" என்றேன்.
அவன் கொஞ்சம் வாட்டசாட்டமாக இருந்தான் . என்னைப் பார்த்து "ஏன்யா, நான் உன்னியா அடிச்சேன். இந்த பக்கிரி எனக்கு ரெண்டுதடவைதான் கடன் கொடுத்திருக்கிறான். இன்னிக்கு கார்த்தாலே இவன்கிட்ட வந்து "பக்கிரி நைனா, ஒரு ஆயிரம் ரூபாய் கொடு" அப்படின்னு கேட்டா "இதுக்கு முன்னாடி வாங்கின கடனைத்திருப்பிக்கொடு. அப்போதான் மூணாவதுவாட்டி கடன் கொடுப்பேன்னு சொல்றான்". எனக்கு எவ்வளவு பணமுடை இருக்குதுன்னு இவனுக்கு தெரியவேணாமா? அதான் சரி நாலு தட்டு தட்டினா தன்னால பணத்தைக் கொடுப்பான்னு. இந்த மேட்டர்ல உனக்கு ஒரு சம்மந்தமும் இல்ல. நல்லபடியா உன் வேலையைப்பார்த்துகினு போப்பா"
அந்த இடும்பன் இப்படிப் பேசியவுடன் நான் பக்கிரியிடம் "போப்பா, பணத்தை இந்த ஆளுகிட்ட கொடுத்துட்டு, போய் டாக்டர்கிட்ட காட்டி கட்டு போட்டுக்கோ. மத்த விஷயங்களை நாம் சாயங்காலமா பேசுவோம்னு" சொல்லிட்டு புறப்படச்சொல்ல அந்த பலமான ஆசாமி என்முதுகில ஒரு தட்டு தட்டிவிட்டு (அது தட்டு இல்ல, கத்தியால் போட்ட வெட்டு மாதிரி வலித்தது) "சரியா சொன்னே கண்ணு" அப்படீன்னான்.
அவன் இன்னொரு தட்டு எங்கேயாவது தட்டப்போறேன்னுட்டு நான் வேகவேகமாக என் வீட்டிற்கு வந்து நம்ம டப்பா வண்டியை அஞ்சு நிமிஷம் ஸ்டார்ட் பண்ணிட்டு அதை மேனேஜ் பண்ணி ஒட்டிக்கொண்டு ஆபீஸ் வர்ரதுக்கு ஒண்ணும் பெரிசாக லேட் ஆவல, என்ன ஒன்பது மணிக்கு பதுல கரீட்டா பதினொண்ணு முப்பதுக்கு முன்னாடியே வந்துட்டேன். இதோ என் வாட்சில பாருங்க சார், 11.29 தான் ஆச்சு. இப்போவே போய் உங்களுக்கு புடிச்ச பில்டர் காபி போட்டு எடுத்துவர்றேன்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (27-Nov-22, 11:38 am)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : aen aafficukku let
பார்வை : 139

மேலே