457 தீ நினைப்பால், தீ நோக்கால் பெரும்பாவம் சேரும் – அறஞ்செயல் 9
அறுசீர் ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)
ஏதிலார் பொருணோக்கி யிச்சையுறல் கவர்ந்ததொப்பாம்
..எழின்மின் னாரைக்
காதலாய் நோக்குதலே கலந்ததொப்பாம் பிறர்கேட்டைக்
..கருத லன்னார்
வேதையுறக் கொன்றதொப்பா மிவ்வாறோர் பயனின்றி
..மேவும் பாவம்
ஆதலினைம் பொறிவழியே மனஞ்செலா தடக்குவார்
..அறிவு ளோரே. 9
அறஞ்செயல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”பிறர் பொருளைப் பார்த்து ஆசைப்படுவது அப்பொருளைக் கொள்ளையிடுவதற்கு ஒப்பாகும்.
அழகிய மின்போன்ற இடையினை உடைய பிற பெண்களை ஆசையாய்ப் பார்ப்பது அம்மாதரைக் கூடியதற்கு ஒப்பாகும்.
பிறர் கெடவேண்டும் என்று எண்ணுவது அவர்களை துன்புறுத்திக் கொன்றதற்கு ஒப்பாகும்.
இவ்வாறு பயன் ஒன்றும் அடையாமலே பாவம் வந்து சேரும்.
அதனால், அறிவுடையோர் ஐம்பொறி விட்ட வழியில் தம்மனத்தைப் செல்ல விடாமல் அடக்கிக் கொள்வர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
இச்சை - ஆசை. கவர்தல் - கொள்ளையிடல். வேதை - துன்பம்.