_____ அக்டோபர் 2021

இரவானால் போதும் அந்த குடியிருப்பிலுள்ள பாழடைந்த வீட்டில் ஏதோ வித்தியாசமாக சில பேச்சுக் குரல்கள் கேட்பதாக பலர் கூறி இருக்கின்றனர்.ஆனால் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை.ஆனால் அக்டோபர் நள்ளிரவு ஒரு மழை இரவில் நான் அந்த இடிந்த கட்டிடத்தை நெருங்கும் போது திடீரென பைக் நின்றுவிட்டது.சரி மழை விடும் வரை சற்று நின்று செல்லலாமென அந்த விடுதி வாசலில் நின்றேன்.அதனருகே தான் அந்த குடியிருப்பு.பாழடைந்த சுவர்களில் செடிகளும் கொடிகளும் படர்ந்திருந்தன.கதவுகள் உடைந்து போயிருந்தன.சுவர்களின் பாகங்கள் ‌உதிர்ந்து போயிருக்க மதில் மேல் ஒரு திருஷ்டி பொம்மை வைக்கப்பட்டிருந்தது.மணி எப்படியும் பதினொன்று இருக்கும்.இன்னும் கூடுதலாக இருக்கலாம்.கடிகாரத்தை வீட்டிலே மறந்துவிட்டிருந்தேன்.தெரு விளக்குகள் பெரும்பாலும் உறங்கி வழிந்தன.பாதி தெருவில் மின்சாரமே இல்லை.மழை நினைத்தது போல நிற்கவில்லை மாறாக வலுத்தது.நேரம் கரைந்த படியிருக்க நான் கிளம்பும் உத்வேகத்தோடு தாறுமாறாக பைக்கை மிதித்தேன்.கால்வலித்தது தான் மிச்சம்.வேறு வழியில்லை.இங்கு நிற்பதை விட கொஞ்சம் தள்ளிக்கொண்டே சென்றால் மெயின் ரோட்டை நெருங்கி விடலாம் என்ற உத்வேகத்தோடு வண்டியை கிளப்பினேன்.சாலையின் சலதி உடையை உழுதது.கால்பதிக்கும் இடமெங்கும் சேறு.சரியாக இருபது அடி வண்டி சென்றதும் உறுமுது போல இருந்தது.பின்னால் எதோ வண்டி வருவதாக நினைத்து நான் திரும்பி நிற்க உறுமல் நின்றது.மீண்டும் வண்டியை தள்ள அதே உறுமல் இன்னும் கூடுதலாக.கொஞ்சம் பதட்டமாக இருந்தும் பின்னால் திரும்பாமல் வண்டியை தள்ள முயன்றேன்.சகதியில் சிக்கிய வண்டி அவஸ்தைப்படுத்தியது.இப்பொழுது நான் அந்த வீட்டின் வாசலுக்கு மூன்று அடி முன்னால் நின்றுக்கொண்டிருந்தேன்.பின்னால் திரும்பவே பயமாக இருந்தது.எதைக்கண்டாலும் விநோதமாக தெரிய ஆரம்பித்தது முடிந்த மட்டும் வண்டியை பலங்கொண்டு இழுத்தேன்.நொடி தான் தாமதம் காற்றில்
தரையில் தொப்பென்று ஏதோ விழுந்து வந்து உருண்டோடி என் காலடியில் நின்றது.திருஷ்டி பொம்மை.தூக்கி எறிந்துவிட்டு வண்டியை முடிந்தமட்டும் முயற்சித்திழுத்து வெளியே கொண்டு வந்தேன்.அந்த தெருவை கடக்கும் வரை மழையும் பயமும் ஓயவில்லை.அடுத்த தெருவில் நான் நுழைந்ததுமே மழை நின்று மின்விளக்கு எரிந்தது.கைகள் பிசுபிசுப்பாக இருக்க விளக்கு வெளிச்சத்தில் கூர்ந்தேன்.இரத்தம்.எப்படி என் கைகளில்? விரல்கள் உதறின.மீண்டும் ஒரு முறை வண்டியை கிளப்ப முயற்சிக்க வண்டி இப்போது ஒளிர்ந்து ஸ்டார்ட் ஆக வீட்டுக்கு விரைந்தேன்.மனம் முழுக்க குழப்பம்.வீட்டுக்கு வந்ததும் அவசரமாக கதவைத் தட்டினேன்.கதவைத் திறந்த குமுதா அலறினாள்.

என்ன ஆச்சு குமுதா எதுக்கு பேய் மாதிரி கத்துற

எங்க போய் விழுந்திங்க வருண்? இப்படி மண்டையெல்லாம் இரத்தமா வழியுது
அவள் பார்வையில் அத்தனை விசித்திரம்

நம்ப முடியாமல் என் கைகளை தலையில் வைத்தேன்

இரத்தம் பிசுபிசுத்தது

நான் தூக்கி எறிந்த திருஷ்டி பொம்மை சட்டென்று நினைவில் வந்தது...

எழுதியவர் : S. Ra (29-Nov-22, 6:39 pm)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 88

மேலே