நல்லவை நாடொறும் எய்தார், அறஞ்செய்யார் முனியார்கொல் தாம்வாழும் நாள் - நாலடியார் 338

நேரிசை வெண்பா

நல்லவை நாடொறும் எய்தார், அறஞ்செய்யார்
இல்லாதார்க் (கி)யாதொன்றும் ஈகலார், - எல்லாம்
இனியார்தோள் சேரார், இசைபட வாழார்,
முனியார்கொல் தாம்வாழும் நாள் 338

- பேதைமை, நாலடியார்

பொருளுரை:

உயர்ந்தோர் அவைக்களத்தை நாடொறுஞ் சென்றடைந்து கேள்விப் பயன் பெறாமலும், நற்செயல்கள் செய்யாமலும், இல்லாத வறியோர்க்கு யாதொன்றும் உதவாமலும், எல்லா வகையாலும் இனியரா யிருக்கும் தம் மனைவியர் தோளை மருவாமலும், கல்வி முதலியவற்றால் உலகிற் புகழுண்டாக வாழாமலுமிருக்கும் பேதைமாந்தர் உயிர்வாழும் தம் வெற்று வாழ்நாட்களை வெறுக்க மாட்டார்களோ!

கருத்து:

பேதையர் வாழ்நாள் வறிதே கழிந்தொழியும்.

விளக்கம்:

நாடொறும் என்னும் குறிப்பால் நல் அவை எனப் பிரித்துரைக்க. இனியராயிருந்தும் தம் துணைவியர் தோள் சேராரெனவே பேதையர் பிற மாதர் நினைவினர் என்பது பெறப்படும்.

ஒரு பயனுமில்லாது கழியுந் தம் வாழ்நாளில் வெறுப்புத் தோன்றாதோ வென்றற்கு, ‘முனியார் கொல்' எனப்பட்டது!.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Dec-22, 10:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த கட்டுரைகள்

மேலே