துளி நம்பிக்கை

நிரம்பிய குடத்திற்கு
நீர் ஊற்றும்
கனிவான கடவுள்
சொட்டு நீர் வேண்டி
தள்ளாடும் பானைக்கு
வறண்ட காற்றை
பரிசளிப்பதும் ஏனோ?
இருக்கும் ஈரமும்
காய்ந்து போகிறதே.
வெயில் அறியா
பசுமை மாறா காடுகளும்
வாழட்டும்.
வெப்பம் தரிக்கும்
முட்புதரும் வாழட்டும்.
முழுதும் வேண்டாம்.
முன்பனி போதும்.
வேர் நிலம் பிடிக்கும்வரை
தண்டாய் அசைந்தாடுவேன்.
பிடிமண் தளரும் வேளை
தாங்கி பிடிக்க வேண்டாது
விறகாய் உருமாறி
எரிந்து பறக்கும் தூளாகி
திசை மறந்து
நேரம் மறந்து
காணாமல் போவேனோ?
இல்லை
அள்ளி கொடுக்க மனமின்றி
கிள்ளி கொடுத்து
வாழும் நாள் கொடுத்த
உன் பாதம் சேர்வேனா?
இளைப்பாறல் மறுஉலகின்
பரிசென்றால்
இப்பிறப்பின் நோக்கம் என்ன?
இருந்து கேள்வி கேட்பேனே அன்றி
துறந்து நான் செல்லேன்.

எழுதியவர் : நிலவன் (3-Dec-22, 11:46 pm)
சேர்த்தது : நிலவன்
Tanglish : thuli nambikkai
பார்வை : 61

மேலே