வண்ணக் கனவுகள்

இன்பமாய்
வண்ணக் கனவுகள்
கண்டது போதும்,

நம் கனவுக்கு நாமே
வண்ணம் தீட்டுவோம் வா !

நாம் எழுகையில்
மறைவது கனவல்ல,
விழுகையில்
துளிர்ப்பதுவே அது !

திரையில் ரசித்த
நாயகனாய் உனை
தினமும் கனவில்
காண்கிறாயே !

விழித்திரையின்
பின்னிருப்பவனை
சற்றே,
விடுதலை செய்து
வெளிக்கொணறு !

நம்
வயிற்றை நிரப்பிய
வயல்கள் எல்லாம்
அங்கே,
வறண்டு போய்
வாடிடுதே !

நம் சந்ததிக்கே
பந்தி பரிமாற,
இன்றே
பசுமை பூசும்
கனவைக் காணு !

சகிப்புத் தன்மை
எனும் பேரில்
சத்தியம் பல
தூங்கிக் கொண்டிருக்கும்
சடலக் கனவுக்கு,

ரத்தச் சிவப்பை
அழுத்திப் பாய்ச்சி
உயிர்த்தெழச் செய் !
தேவைப்படும் போதெல்லாம் !

எண்ணங்களைச்
சேர்த்து வை,
சிந்தனைகளைக்
கோர்த்து வை,
கனவெனும்
மாலையாக்கு !

உன் சமூகக்
கனவுகளையும்
சேர்த்தே
கையாடல் செய் !

தேவையான வண்ணம் பூசு,
அதைக் களத்தில்
இறக்கிக்
காட்சியாக்கு,
கண்டம் தாண்டியும்
கடத்திச் செல் !

பற்றி எரியும்
தீச்சுடர் காட்டும்
வண்ணங்கள் பல !
அது போல,
நம் கருப்பு வெள்ளை
கனவுகளும்
பற்றி எரியும் போது
பல வண்ணம் பூசிக் கொள்ளும் !
நம் எண்ணம் பேசி
அது வெல்லும் !

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (4-Dec-22, 9:01 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
Tanglish : vannak kanavugal
பார்வை : 99

மேலே