350 இருக்கை இன்சொல் வரவேற்பால் எய்துவது அன்பு – இனிய சொற்கூறல் 7

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

எதிர்சென்று முகமன் கூறி
= யிருக்கையும் நல்கி யுண்டே
அதிசய மெனவி னாவி
= அன்பொடு முகம லர்ந்து
துதிபுரிந் துபச ரிக்கும்
= தொழிலினாற் செலவொன் றில்லை
அதிர்கடல் உலகு ளோர்தம்
= அன்பெலாம் வரவா மாதோ. 7

– இனிய சொற்கூறல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”ஒருவரைக் கண்டபொழுது எதிர்சென்று உபசார வரவேற்புடன் இன்சொற்கள் சொல்லி, அமர்வதற்கு ஆசனம் தந்து, சுகநலம் எப்படி என்று அன்புடன் முகமலர்ந்து வாழ்த்தி வரவேற்கும் செய்கையால் ஒரு செலவும் இல்லை. ஒலிக்கும் கடலால் சூழப்பட்ட உலகத்தாருடைய அன்பு முழுவதும் வரவாகும் அல்லவா” என்கிறார் இப்பாடலாசிரியர்.

முகமன் - இன்சொல். இருக்கை - மணை; ஆசனம். அதிசயம் - நன்மை; சிறப்பு. துதி - வாழ்த்து.

உபசரிக்கும் - வரவேற்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Dec-22, 7:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

சிறந்த கட்டுரைகள்

மேலே