434 உடல் பிணமானால் ஒருவரும் நெருங்க மாட்டார் - யாக்கை நிலையாமை 16
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
எமதெனுமெய் பிறக்குமுன்னெங் கிருந்ததின்னஞ் சிலகாலத்(து)
..எங்கே செல்லும்
அமருயிர்நீங் கியபின்னோர் கணமுமனை சேயரிதன்
..அருகே நில்லார்
தமர்சவமென் றெடுத்தெறிவார் பறவைவிலங் கினங்கூடித்
..தத்திக் கொத்தி
அமர்செய்து புசிக்குமப்போ தென்னென்று கேட்பவரார்
..அறிவில் நெஞ்சே 16
- யாக்கை நிலையாமை, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”அறிவில்லாத நெஞ்சே! எனது எனப்படும் இவ்வுடல் பிறக்கும் முன் எங்கே இருந்தது? இன்னும் சில காலம் கழித்து எங்கே செல்லும்? இவ்வுடலில் தங்கியிருக்கும் உயிர் அகன்ற பின் ஒரு நொடிப்பொழுதும் மனைவியும் மக்களும் இதனருகே நிற்க மாட்டார்கள். நம் உறவினர் பிணம் என்று சொல்லிப் புறங்காட்டில் எடுத்தெறிவர். பறவை, விலங்கு இனங்கள் கூடி உடல் மேல் ஏறிக் குதித்தும் கொத்தியும் சண்டையிட்டுத் தின்னும். அப்போது தடுத்து ஏன் என்று யார் கேட்பார்?” என்கிறார் இப்பாடலாசிரியர்.
அமரும் - தங்கியிருக்கும். சேயர் - மக்கள். அமர் - சண்டை