பொற்கலத் தூட்டிப் புறந்தரினும் – நாலடியார் 345

நேரிசை வெண்பா
(ற், ச் வல்லின எதுகை)

பொ’ற்’கலத் தூட்டிப் புறந்தரினும் நாய்பிறர்
எ’ச்’சிற்(கு) இமையாது பார்த்திருக்கும்; - அச்சீர்
பெருமை யுடைத்தாய்க் கொளினுங்கீழ் செய்யுங்
கருமங்கள் வேறு படும். 345

- கீழ்மை, நாலடியார்

பொருளுரை:

பொன்னாற் செய்த உண்கலத்தினால் உண்பித்துப் பாதுகாத்தாலும் நாயானது பிறர் எறியும் எச்சிற் சோற்றுக்குக் கண்ணிமையாமல் விழித்துக்கொண்டு காத்துக் கிடக்கும்;

அதைப்போல, பெருமைக்கு உரியவனாகப் பெருமைப்படுத்தினாலும் கீழான குணமுடையவன் செய்யுஞ் செயல்கள் அந்நிலைமைக்கு வேறாகும்.

கருத்து:

கீழான குணயியல்பு, திருத்தினாலுந் திருந்தாது.

விளக்கம்:

புறந்தருதல் - காத்தல், பார்த்திருக்கும்.

வேறுபடும் என்பது, கீழ்மைத் தொழில்களாகவே நிகழும் என்னுங் குறிப்பிற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Dec-22, 8:25 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே