விழுமியோர் எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல் – நாலடியார் 346

இருவிகற்ப நேரிசை வெண்பா

சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும்
முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை
இந்திரனா எண்ணி விடும். 346

- கீழ்மை, நாலடியார்

பொருளுரை:

ஆட்சிச் செல்வம் பெற்றாலும் மேலோர் எந்தக் காலத்திலும் வரம்பு கடந்த சொற்களைச் சொல்ல மாட்டார்கள்;

ஆனால் முந்திரியளவுக்கு மேற் காணியளவாகச் செல்வம் மிகுவதானால் கீழ்மகன் தன்னை என்றுந் தேவர் கோனாக எண்ணி இறுமாந்து உரையாடுவான்.

கருத்து:

சிறிது செல்வம் மிகுதியானும் கீழ்மக்கள் மிகவுஞ் செருக்குவர்.

விளக்கம்:

அரசாட்சிச் செல்வம் ‘ஈண்டுச் சக்கரச் செல்வம்' எனப்பட்டது.

மண்ணுலக வேந்தனாகவுமன்றி விண்ணவர் கோனாகவே எண்ணி விடுவனென்றற்கு, ‘இந்திரனா' வென்றார்.

சிறு இன்பத்தையும் பெரிது பாராட்டிக் களிக்குங் கீழ்மை இயல்பினை இச் செய்யுள் விளக்கிற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Dec-22, 8:30 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே