120 பின்தூங்கி முன்னுணரும் பெண்ணே பெரும்பொருள் - கணவன் மனைவியர் இயல்பு 12
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
தந்துணைவர் வடிவிலா முடவரெனி னுந்திருவின்
..தனையன் ஒப்பாம்
அந்தமுளார் அயல்குமர ரெனினு’ம்’விடம் அனையராம்
..அரும ணாளர்
வந்தமுதுண் டுறங்கியபின் தாமுண்டு துயின்று
..முனம்வல் லெழுந்து
பந்தமுறுங் கருமமெலா முடிப்பர்கற் பினணிபூண்ட
..படைக்கண் ணாரே. 12
- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
தன் துணைவனான கணவன் கை கால்கள் அதற்கேற்ற வடிவில் இல்லாமல் நொண்டியாக இருப்பினும் அவன் அழகிற் சிறந்த காமனுக்கு ஒப்பானவன். அருகிலுள்ள அயலார் பேரழகு வாய்ந்தவரே எனினும், அவர்கள் நஞ்சினுக்கு ஒப்பானவர்கள்.
”அருமை மிக்க கணவன் வந்து அமுதமாகிய உணவினை உண்டு உறங்கியபின், தானும் உண்டு உறங்கி, கணவன் எழுவதற்கு முன் எழுந்து விருப்பமுடன் வேண்டிய காரியங்களை எல்லாம் செய்து முடிப்பார்கள் கற்பு என்ற அணிகலன் பூண்ட, படைகள் போன்ற கண்களை உடைய பெண்கள்” என்று கணவனுடன் கூடி வாழும் இனிய தாம்பத்தியம் பற்றி இவ்வாசிரியர் எடுத்துரைக்கிறார்.
திருவின் தனயன் - திருமகள் மகன்.