119 உழைப்பால் தளர்மனையை ஓம்பல் பெருங்கடன் - கணவன் மனைவியர் இயல்பு 11

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

அனைதந்தை இல்லத்துஞ் சுகமில்லை நமக்குரியள்
..ஆன பின்னர்
மனைதாங்கல் சூதகஞ்சூல் சேய்பெறுதல் வளர்த்தலொடு
..மாமன் மாமி
இனையவரை யுபசரித்தல் விருந்தோம்பல் நம்பணிகள்
..இயற்ற லென்னும்
வினைகளினா லயர்மனையைப் பரிவுடனா தரவுசெய்ய
..வேண்டு நெஞ்சே. 11

- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

நெஞ்சே! மனைவி நமக்குரியவளாக ஆனபின், அவளுக்குத் தன் தாய் தந்தையர் இல்லத்தில் சென்று வாழ்வது இன்பம் இல்லை. நம் வீட்டிலும் மனையறம் பேணல், கருத்தரித்துத் தாங்கல், மக்கட் பெறுதல், அவர்களை வளர்த்தல், மாமன் மாமியாரையும் பாதுகாத்து உபசரித்தல், விருந்தோம்பல், நமக்கு வேண்டிய பணிகளைச் செய்தல் என்ற கடமைகளைச் செய்கிறாள்.

அதனால் தளர்ந்து மெலிந்து வருந்தும் அவளைப் பரிவுடன் துணையிருந்து இன்புறச் செய்ய வேண்டும் என்று கணவனுக்கு இவ்வாசிரியர் கனிவாய்க் கூறுகிறார்.

பரிவு - பேரன்பு. ஆதரவு - துணை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Dec-22, 10:17 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே