பெறாஅஅன் பேதுறுதல் எண்ணிப் பொறாஅன் கரந்துள்ள தூஉம் மறைக்கும் - பழமொழி நானூறு 240

நேரிசை வெண்பா

மறாஅ தவனும் பலரொன் றிரந்தால்
பெறாஅஅன் பேதுறுதல் எண்ணிப் - பொறாஅன்
கரந்துள்ள தூஉம் மறைக்கும் அதனால்
இரந்தூட்குப் பன்மையோ தீது. 240

- பழமொழி நானூறு

பொருளுரை:

மறுக்கும் இயல்பில்லாதவனும் இரவலர் பலரும் ஒரு பொருளை விரும்பினால் எல்லோர்க்கும் கொடுக்க முடியாமையால் அதனைப் பெறாதவன் மயக்கம் உறுதலை நினைத்து மனம் பொறாதவனாகித் தன்னிடத்துள்ள பொருளையும் கரந்து மறைப்பான்;

ஆகையால், யாசித்து உண்ணும் உணவிற்கு ஒருவனிடத்திலே பலரும் சென்றிரத்தல் தீமையைத் தருவதாம்.

கருத்து:

ஒருவனிடத்தில் யாசிப்பதற்குப் பலரும் ஒன்று சேர்ந்து செல்லுதல் ஆகாது.

விளக்கம்: நல்ல இயல்பு உடையவனாதலின், சிலர் பெறாதொழில் கண்டு பொறாது மறைப்பன். 'கரந்து மறைக்கும்' என்றது, தான் கொடாதவனைப் போல் மறைந்து நின்று தன் பொருளையும் மறைத்தொழுகும் என்பது. பன்மை ஈண்டுப் பலர்மேல் நின்றது.

'இரந்தூட்குப் பன்மையோ தீது' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Dec-22, 6:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

சிறந்த கட்டுரைகள்

மேலே